அருகிய பறவைகளின் துயரோசைகள் – From What is Before (2014) திரைப்படம் பற்றிய கட்டுரை.

”என்னைச் சுற்றி எண்ணிலடங்காத் தீயோர் உள்ளனர். என் தலைமுடியைக் காட்டிலும் அதிகமான என் பாவங்கள் என்னைத் தப்பவிடாமல் சூழ்ந்து பிடித்தன; நான் தைரியம் இழந்தேன்; கர்த்தாவே என்னைக் காப்பாற்றும்!”

-சங்கீதம் (40:12)

அதிகாரத்தின் மீவிழைவு, எந்த நேரத்திலும் தன் இரும்புக்கரங்களைத் தயாராக வைத்திருக்கும்; எதற்கு? குருதிச் சதுரங்கம் விளையாட! அதற்கு மக்களே உழைத்து தம்மை உயர்த்தவும் வேண்டும், தேவைப்பட்டால் அவர்களைப் பலிகொடுக்கவும் முடியும். அந்தக் குருதியாட்டத்தில் மக்கள் சிப்பாய் காய்கள்.

ஃபெர்டினாண்ட் மார்கோஸ் இராணுவ ஆட்சியை நிறுவிய தொடக்க காலத்தைக் களமாக எடுத்துக்கொள்கிறது லாவ் டயஸின் (Lav Diaz) From What Is Before (2014) திரைப்படம். இரண்டு முறை மட்டுமே நாட்டின் குடியரசு தலைவராக இருக்க வேண்டும் என்ற அரசியல் சாசன விதியை மீறுவதற்குத் குதர்க்கமாக ஒரு திட்டம் தீட்டுகிறது மார்கோஸ் அரசு. தனது பதவிக்காலம் முடிவதற்கு வெறும் இரண்டு நாட்கள் முன்பு, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இராணுவ ஆட்சியை நிறுவிக் கொள்கிறது. அதன் வழியே சாசுவதமாக ஆளலாம் என்ற சாத்தானின் சிரிப்பொலி அரசின் அகத்தில் எதிரொலிக்கிறது.

எப்போது சர்வாதிகாரிகள் தனக்கு நெருக்கமான, தன் இனக்குழுவைச் சார்ந்தவர்களை நம்பிக்கைக்குரிய சிறு படையாக அமைத்து தக்கவைத்துக்கொள்வதுண்டு. அவர்களைக் கொண்டு, உள்நாட்டு எதிரிகளையும் எதிரிகளாகச் சாத்தியமுள்ளதாகக் கருத இடமளிப்பவர்களையும் எளிதாக இனம் காணலாம்;சித்ரவதை செய்யலாம். பிடிக்காதவர்களை வறுத்தெடுக்கும் கூடுதல் வாய்ப்பும் உண்டு. இங்கும் அப்படி சிலர் நீதியை நிலைநாட்டுவதற்கான காவலர்கள் என்ற பதாகையை நெற்றியில் தாங்கி பிலிப்பைன்ஸின் மாதிரி சிறு கிராமத்திற்குள் நுழைகின்றனர்.

கனரக துப்பாக்கிகளின் முனையால், புன்னகைக்க தயாராகும் மொட்டுகளின் ஒல்லித் தண்டுகளை நசுக்கி முன்னகர்கின்றனர். பெரிய போராட்டங்களோ எதிர்ப்போ அந்த கிராமத்து மக்களிடம் இருந்து வெளிப்படப்போவதில்லை என்ற தன்னம்பிக்கை! அவர்கள் அபலத்தின் கடைசி நிலையில் இருக்கின்றனர். தீர்ந்து விடப்போகிற மூச்சை இழுத்தபடி உள்ளனர். விரல்விட்டு எண்ணிவிடும் மக்களே அக்கிராமத்தில் வாழ்கின்றனர்.திரைப்படம் முடிந்த பின் அவர்களே சாசுவதமான கதாபாத்திரங்களாக நமக்குள் மாறியும் விடுகின்றனர்.

நெருநல் உள்ளவன் இன்றில்லை என்ற பெருமை கொண்ட இவ்வுலகில், சிறிய வாழ்நாளை உயிருக்கஞ்சி கடக்க வேண்டிய நிலையில் அவர்கள் காலத்தைக் கடத்துகின்றனர். வனம் போன்ற எழில் கொண்ட அந்தக் குக்கிராமத்து மக்கள் நாற்திசையிலும் பீதி சூழ வாழ்கின்றனர்.  இரவுகளில் மர்மமான முறையில் சில வீடுகள் பற்றி எரிகின்றன; பசுக்கள் ஓலமிட்டு இறந்து கிடக்கின்றன; திடீரென தம் வாழ்விடங்களில் மனித சவங்கள் கண்டறியப்படுகின்றன. இவை எல்லாம் அங்கிருக்கும் வாழ்வை அச்சத்தின் முட்படுக்கையாக மாற்றுகிறது. ஒவ்வொருவரும் வாழ்வதற்கு உயிர் போற்றிய நிலை போய், உயிருக்காக வாழும் அவலத்தில் இருந்து வெளியேற தயாராகின்றனர்.

ராணுவ ஆட்சிப்பீடம் என்ற ராட்சத அட்டைப்பூச்சிக்கு எண்ணிறந்த கால்கள். துப்பாக்கி ஏந்திய ‘சிப்பாய்கள்’ என்று பெயரிட்ட அக்கால்கள் அக்கிராமத்தில் கூடாரமிடுகின்றன. சப்பாத்துக் கால்கள் என்பதால் மெல்லிய மனங்களை எளிதில் மிதித்து நசுக்கிவிடக்கூடியவை அக்கால்கள். அந்த கிராமத்தில் நிகழ்ந்த மர்ம நிகழ்வுகளை அவர்களே உள்நுழையும் பொருட்டு திட்டமிட்டு உருவாக்கினரா? படத்தில் நேரடி பதில் இல்லை. ஆனால் பூடகமாய் எல்லாம் சுட்டப்பட்டிருக்கிறது. காய்நகர்த்தல்களின் அடுத்த படிநிலைக்கு வந்துவிட்டது அரசாங்கம்!

எப்போதும் சர்வாதிகாரத்தின் பெரிய லாபத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிலத்தினரைத் தீவிரவாதிகளாக முத்திரை குத்துவதை தொழில்நுட்பமாகப் பயன்படுத்தும் வழமை உண்டு. அப்படிச் சொல்லி அந்நிலத்தைக் கைப்பற்றி காட்டுவது மீதமிருக்கும் தேசத்து பெரு மக்களிடம் நற்சான்றிதழ் பெறுவதற்கான அச்சாரம். அரசாங்க செலவில் வாழும் சீருடை அணிந்த தீவிரவாதிகள், ஏழை மக்களைச் சுட்டும் வண்ணம் அவ்வூரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ‘இல்லை நான் பல்லாண்டுகளாக அவர்களுக்குப் பிரசங்கம் செய்கிறேன், அவர்கள் நல்லவர்கள்’ என்று மறுக்கும் பாதிரியாரிடம் அரசாங்கத்தின் கமுக்க விபரங்களைத் தெரிவிக்க இயலாது என்று முறுக்கிகொள்கின்றன சப்பாத்து கால்கள். கமுக்கம் என்பதன் நிஜம் நாங்கள் யாரையும் கொள்ளும் அதிகாரம் படைத்தவர்கள் என்ற பிரகடனமே அன்றி வேறில்லை. அவர் மீறி தன் போக்கில் முன்னகர்ந்தால் ‘நீ இறைவனுக்கு அஞ்சுவது இங்கு முக்கியமல்ல பாதிரி, அரசுக்கு அஞ்சு இல்லையே தலை சிதறும்’ என்று நீண்ட இரும்பு சுட்டுவிரல் போல் இருக்கும் துப்பாக்கியை நீட்டி குழுப் பின்னணி குரல் தருகின்றனர். 64 கட்டங்களில் ஆடும் சதுரங்கத்திற்கு மீறக்கூடாத விதிகள் உண்டு. அது போன்றவற்றைத் துடைத்தொழித்து விட்டு வெறியாடுகிறது ராணுவ நிர்வாகம்.

நிர்கதியானவர்களால் கைவிடப்பட்ட கிராமத்தின் மெளனம் கண்ணீரை வரவழைக்கிறது. கருப்பு வெள்ளை காட்சிகள் வழியே கவிழும் துயரம் நம் நெஞ்சிலும் உருகி ஒழுகுகிறது. நாகரீகம் என்பதன் பொருள் அதை நிறுவியவர்களுக்கே புரிவதில்லை எனும் போது, அவல வாழ்வில் அல்லல் உறுபவர்கள் இயற்கையைக் கொஞ்சி, அஞ்சி, வழிபட்டு வாழ்வதே எஞ்சிய போக்காகிறது.ஒவ்வொரு நகர்விலும் தீவிரமடையும் மரணத்தின் நிழல் அச்சத்தின் மணத்துடன் கமழ்கிறது.பூக்களின் மலர்வைப் பார்த்து அதைப் புன்னகை என்று சொல்லி ஆனந்த கூத்தாட எவருமில்லை. எல்லோருக்குள்ளும் தளர்வு மிகுந்திருக்கிறது.கவின்மிகு பசுங்கழனியை ஆண்டாண்டுகளாய்ஆக்கியவர்கள் நிலத்தின் செதில்களான மண்ணாங்கட்டியை நினைவுச்சின்னமாகப் பிடித்து உருட்டி தம் மனங்களில் எடுத்து செல்கின்றனர்.

ஆனால் சில மனங்கள் எளிதில் தன் இருப்பிடத்தில் இருந்து இடம் பெயர மறுக்கின்றன. உலகின் வேற்றிடம் பற்றிய அச்சத்தாலோ, இந்நிலத்தின் மீதுள்ள பற்றாலோ, அறியமுடியாத காரணங்களாலோ இங்கிருந்து வெளியேறுவது பற்றி அவர்கள் ஒவ்வாமை கொள்கின்றனர். அவர்களே படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். நெடுங்காலம் வாழ்ந்த உழவன் சிடோ, மது தயாரிக்கும் டோனி, ஜோஸலினா என்ற மூளை வளர்ச்சி குன்றி சகோதரியைப் பராமரிக்கும் இடாங், சுறுசுறுப்பான ஓட்டத்தாலும் மனிதக்குருதியின் வன்மம் விளங்காததாலும் சிறுவனாக இருந்த ஹகோப். இவர்களுடைய தீராத இடும்பைக்குச் சில சொட்டுகள் பொன்மொழிகள் தந்து ஆறுதல் அளிக்க முனையும் பங்குத்தந்தை. படுக்கைகள் விற்பது போல வந்து உளவு வலைவீசும் காவல்துறை பெண்.

பத்துக்கும் குறைவான தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிகையில் திகைப்பு எழாமல் போகாது. பத்துக்கும் குறைவான முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு இத்தனை பிரம்மாண்டத்தை, 338 நிமிடங்கள் ஓடும் பெருநாவலுக்கு இணையான படைப்பைத்திரையில் நிகழ்த்த முடியும் என்ற அசாத்தியம் படம் பார்த்து முடித்த பிறகே நெஞ்சில் உறைத்தது. 1972ல் இப்படி மிஞ்சிய ஓரிருவரையும் துடைத்தொழித்து விடும் வெறித்தனத்திற்குத் தயாராகிறது ராணுவ அரசு. கடைசி கட்ட காய்நகர்த்தல்கள்! ஆட்டம் அந்தமுறப்போகிறது. ஆழியலை மோதி அரித்த வரைகளும் வனத்திற்குள் அனுமதி தந்த மரங்களும் சிறு விலங்குகளும்கொந்தளிக்கும் ஆழியும் மானுடப் பரிதாபத்திற்குச் சாட்சியாக -எளிய மக்களின் வாழ்காலத்திற்கு முன்னும் பின்னுமென நீடித்து  – நிற்கின்றன.

அதிகாரத்தைமையமாக்குவதன் நோக்கமே வளங்களைச் சுரண்டுவதுதான்.வளங்களைச் சுரண்டுவதன் நோக்கமோ தொடர்ந்து தன் வல்லாட்சி நிலைபெறச் செய்யும் பணத்தேவையைப் பூர்த்தி செய்வது.ஒரு போதும் அதிகார மையமாக்கல் மக்களின் தேவைக்கோ, நலத்திற்கோ துணை போகாது.மக்களைக் காக்க தேசத்தின் எல்லைக்கோடுகளில் சீருடைகளை நிறுத்தி விளையாட்டு காண்பித்து வீராவேசமாக வெற்றி கோசங்களை எழுப்பும் அரசாங்கம் உள்ளபடியே குற்றவாளி. அதைப் பிரச்சார நெடியின்றி கலையாகப் படைப்பது பெரும் சவால். அது இத்திரைப்படத்தில் நிகழ்ந்திருக்கிறது.

2

2010ல் வெளியான ஆஸ்திரிய திரைப்படமான The White Ribbon ஒரு செவ்வியல் ஆக்கம். அது முதல் உலகப்போருக்கு ஆதாரப் புள்ளியான செராஜிவோ படுகொலையில் முடிகிறது. அந்த வரலாற்று முடிச்சுக்கு வருவதற்கான மனநிலை எப்படி மெல்ல உருக்கொண்டது என்பதைப் புனைவின் வழியே கண்டடையும் மகத்தான படம். குழந்தைகளின் வன்மம் அத்திரைப்படத்தின் உள்விசை, உட்பொருள் எல்லாமே வியப்பூட்டும் கச்சிதத்துடன் அமைந்திருக்கும். அக்குழந்தைகளுக்குள் பீறிடும் அன்பையும் ஐயங்களையும் நலிவுறும் ஐரோப்பிய பண்பாடு எப்படி மடைமாற்றுகிறது என்ற ஆய்வும் அதற்கான புனைவுச்ச தருணங்களும் அதில் உண்டு.

லாவ் டயஸின் From What Is Before திரைப்படத்தைப் பற்றி பேசும் போது நிச்சயம் மைக்கேல் ஹனாகேவின் ஆஸ்திரிய படைப்பைத் தவிர்த்துவிட்டு பேசுதல் இயலாதது. இரண்டுக்கும் இடையே நிறைய இணைகோடுகளை வரைய இயலும். அதை நான் விளக்க முற்படவில்லை. இரண்டு திரைப்படங்களையும் கண்டு ரசிக்கவும் உணர்வுகளைத் தழுவிக்கொள்ளவும் அவ்விளக்கம் தடையாக இருக்கக்கூடும். ஆனால் லாவ் டயஸின் படம் எப்படி வேறுபடுகிறது, எதை நோக்கி முன்னகர்ந்துள்ளது என்பது முக்கியமாகப் படுகிறது.

லாவ் டயஸ் யார் கரத்திலும் வெள்ளை ரிப்பனைக் கட்டி அறத்தை நினைவூட்டும் காட்சிகளை உருவாக்கவில்லை. மாறாக வெகு குறைவான உரையாடல்களின் வழியாகவும் படிமங்களின் வழியாகவும் அருகிவரும் குருவி இனம் பற்றிய தன் நினைவேக்கத்தைப் பகிரும் உருவகத்தின் வழியாகவும் துயரத்தை மட்டுமே படைக்கும் பணியைச் செவ்வனே செய்கிறார். வெள்ளை ரிப்பன் படத்தில் துயரம் ஒரு அங்கமாக மட்டுமே வருகிறது. குழந்தைகள் கூட இரண்டாம் உலகப் போரில் வெறியுடன் கொலை செய்த இளைஞர்கள்தானோ என்ற பதற்றம் எழுகிறது. அது பல்வேறு கோணங்களை நோக்கி விரிந்து எழுந்த கதை. டயஸ் இங்கு இன்னும் இன்னும் ஆழ்ந்த துயரத்திற்குள் நம்மைத் தள்ளவே விழைகிறார். அது முழுமையான நோக்கில் குறைபாடுடைய களம்தான். ஆயினும் அந்த துயரத்தைப் பகிர்வதன் வழியே தம் தேசத்தின் தழும்புகளைக் களிம்பு பூசிக்கொள்வது மட்டும் அவரது நோக்கம் என்ற உறுதிப்பாடு தெரிகிறது. ஐந்தரை மணி நேரங்களுக்கும் மேலாக நீண்டு ஓடும் ஒரு மாம்மோத் திரைப்படம், அதற்கான நியாயங்களைச் செய்கிறது என்பது – அதில் விடுபட்ட வாய்ப்புகளை விட – முக்கிய வெற்றி.

3

கதாபாத்திரங்களின் வலிகள் மெல்ல தீவிரமடைவதைச் சொல்லும் நிதானம் பதைபதைக்க வைக்கிறது. குறிப்பாக ஜோஸலினாவும் அவளைப் பராமரிக்கும் இடாங்கும் முற்றாக கசங்கி, துயருற்று, நிர்கதியில் வீழும் நிலை உள்ளத்தை உடைக்கிறது. நாகரீகமான – சராசரியான மூளை கொண்டவர்களுக்குப் புரியாத கட்டின்மை ஜோஸலினாவை ஓலமிட வைக்கிறது. அவள் வலிக்கு அழத்தெரியாதவர்களுக்கும் சேர்த்தே, தீச்சகுணத்தை அறிந்த நாயின் ஓலம் போல அழுகிறாள்.அவளை உளம் குன்றியவள் என்று பார்ப்பவர்கள், தம் துயரத்தைத் தீர்க்க உதவும் சிறுதெய்வமாகவும் பார்ப்பது காலத்தின், வாழ்வின் முரண்.

ஜோஸலினா தனித்திருக்கும் போது அவளது குறுகிய கால்களையும் கோணிய முகத்தையும் கூடப் பொருட்படுத்தாமல், உதாசீனித்து விட்டு அவளைக் காமத்தில் ஆக்கிரமிக்கிறான் டோனி. அருவெறுக்கத்தக்க வன்புணர்வு! அந்தப் படுபாதகத்திற்கு அவன் அவளைத் தயார்படுத்தும் போது ஒவ்வொருநொடியும் நம்தண்டுவடத்தில் கனலெறிகிறது. சக மனிதர் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் வன்முறை அரசாங்க வன்முறையை விஞ்சக்கூடியதோ என்று தோன்றிவிடுகிறது. அல்லது சகமனிதனுக்குத் தனியன் செய்யக்கூடிய வன்முறையைத்தான் பெரிய அளவில் அரசாங்கம் இனங்களுக்குச் செய்கிறது என்று குறிப்பிடுகிறது.

இடாங், வழக்கத்திற்கு மாறாக ஒலியற்றிருக்கும் வீட்டில் நுழைந்து ஜோஸ்லினாவை அழைக்கும் காட்சி இன்னும் கொடுமை. வாயில் துணி திணிக்கப்பட்டு வன்புணர்வு நிகழ்ந்திருக்கிறது. அவள் அழுது அரற்றவில்லை என்ற போதும் நம் மனத்தினுள் கொதிநிலை உச்சம் கொள்கிறது. இப்புடவியில் வாழும் பொருட்டு நம் மீதே நமக்கு நாணம் உருவாகிறது. அதை யார் செய்திருக்கக்கூடும் என்று எப்படி விசாரிப்பது? விசாரித்து மட்டும் என்ன செய்வது? ஊழிக்காலத்தில் வாசலுக்கு வந்த தீராப்பெருவலி. அதையும் தாண்டி அவளைத் தாங்கும் தனது திசையற்ற நிலையில் இடாங் தவிக்கும் காட்சிகள் ஈரல்குலையை நடுங்க வைப்பவை. மரணம் ஒன்றே தங்கள் இருவரையும் கை நீட்டி அழைக்கும் காரூண்யம் என்பது அவளுக்குப் புரிந்ததும் கிட்டதட்ட நமக்கே ஒரு விடுதலை உணர்வு வந்துவிடுகிறது.

சர் சிடோ குடியானவனின் உதாரணம். வயல்வெளி பசுமையின் உருவகம். தன் குடும்பத்தினரைப் பத்திரமாக அனுப்பி விட்டு அந்நிலத்திலேயே வாழும் பிடிவாதக் கிழவன். நிலக்கிழவன்! பேரப் பிள்ளைகளையும் ஊரில் இருக்கும் உதிரி மக்களையும் கவனித்து நேசிப்பவர் அவர். இடாங், ஜோஸலினாவின் இரட்டை மரணம் ஒவ்வொரு உள்ளங்களாகக் கடந்து வருகிறது. அதை ரகசியமாகப் பாதுகாக்கவே முடியவில்லை. நெருப்பினை மறைக்க அதன் மேல் அமர்ந்த பிருஷ்டம் வெந்து மணமெழுப்புவது போல ஒவ்வொருவரும் அதைத் தாளாமல் சிடோவிடம் இறக்கி வைக்கின்றனர்.

டோனி நாசரேத் மகனைக் காட்டிக்கொடுத்த யூதாஸைப் போல் குற்ற உணர்வில் கூனி தன் வன்புணர்வு கொடுமைகளை ஒப்புவிக்கிறான். அதைக் காதல் என்றும் தலைப்பிடுகிறான். அந்த கதாபாத்திரம் அடையும் புள்ளி ஒரு புனைவு ஆறுதல். டோனி கரும்புள்ளி எனில், ஹகோப் என்ற சிறுவன் இந்த படத்தின் வெள்ளை ரிப்பனாக வலம் வருகிறான். அசையாத சட்டகத்தில் எரியும் திரி விளக்கின் முன், தான் பள்ளிக்கூடத்தில் இருந்து திருடி வந்த பிலிப்பைன் தேசத்தின் வரைபடத்தை வைத்து தன் பெற்றோரின் ஊரைத் தேடுவதும், உண்டிவிற்களை விற்று அங்கு செல்ல காசு சேகரிப்பதும் எத்தனை அபத்தமானத் திட்டமிடல்களையும் சுட்டிவிடும் கனம் கொண்டவை.

லாவ் டயஸ் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் என்பதும், ரஷ்ய பெரு இலக்கியங்களின் தீவிர வாசகர் என்பதும் நேரடியாகப் புலனாகிறது. ஏற்கனவே தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலைத் தழுவி படமாக்கியிருக்கிறார் என்பது அதை ஐயமின்றி உறுதி செய்கிறது. கதாபாத்திரங்கள் இருளில் இருந்து ஒளிக்கும் ஒளியில் இருந்து இருளுக்கும் அலைந்து திரிகின்றனர். அவர்களது பதற்றங்களிலும் குரூரங்களிலும் பொங்கி எழும் மீட்சியைக் கலையின் பலனாக அவர் காண்கிறார் என்பது தெளிவு.

4

இயற்கையின் தீராத அச்சுறுத்தல்களைக் காட்சிகள் தோறும் டயஸ் முன்நிறுத்துகிறார். மலைகளின், ஆழியின் மா உருக்களிடையே ஊறும் அரவத்தைப் போல, கொக்கரிக்கும் சேவலைப் போல, முக்காரமிடும் எருதைப் போல மனிதனும் ஒரு சிறு பகுதியே என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார். ஒவ்வொரு காட்சியிலும் இயற்கையின் சங்கிலிக்குள் விழியறியாத அல்லது விழி பொருட்படுத்த தகாத ஒரு சிறு கன்னியாக மட்டுமே எஞ்சுகிறது மானுட வாழ்வு.

ஏறத்தாழ அனைத்து காட்சிகளும் இயக்குநர் கண்டறிந்த அசாதாரணமான ஒற்றை சட்டகங்களுக்கு உள்ளேயே நிகழ்கின்றன. ஒரு காட்சி ஒரு சட்டகம். அச்சட்டகம் பெரும்பாலும் விரிநிலத்தின் மெளனத்துடனோ, காய்ந்த சருகுகளின் மென் சலனத்துடனோ, உச்சந்தலையில் கொட்டிப் பொழியும் மழையின் சடசடப்புடனோ, கொந்தளிக்கும் ஆழியலைகளுடனோ தொடங்குகிறது. அதன் ஊடாக மனித அகத்தின் நாதத்தை விழிமுன் படைக்கும் அசாத்தியத்தைச் செய்கிறார். பெரும்பாலும் பல நொடிகளுக்குப் பிறகே அச்சட்டகத்திற்குள் மனிதனை நுழைய அனுமதிக்கிறார். மானுடருக்கு முன்னிருந்து பின்னும் நிலைக்கக் கூடிய இயற்கை லாவ் டயஸின் அசாத்தியமான படமாக்கலால் நம்மை நீள்மூச்செறிய வைக்கிறது. மக்களுக்கு அவர்களுக்குரிய சிற்றிடத்தையும் இயற்கைக்கு அதற்கே உரிய பேரிடத்தையும் உரித்தாக்குகிறார்.

மிகக் கச்சிதமான நிலக்காட்சிகளைக் கண்டடையும் இயக்குநர் அவற்றை அகத்தின் கொந்தளிப்புகளோடு வெகு இயல்பாக பொருத்திவிடுகிறார். கலைப் பெறுமதியே அகத்தில் வெடிக்கும் புறக்காரணிகளைக் கண்டடையும் தேடலில்தானே உள்ளது. வனத்தரையில் மெல்ல நடைபோடும் பசு, வீட்டு முற்றத்தில் உலாவும் நாய்கள், கடலரித்த குன்றுத்தெய்வம், மழைக்குக் குடையாகும் மரக்கிளைகள் என ஒவ்வொன்றும் மிக நீண்ட காட்சிகளில் நம்முன் விரிகின்றன. அவை மானுடர்களை அணைப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் நம்முள் கற்பனைகளை விரிக்க வாய்ப்பளிக்கிறார். நிலத்தை அண்டி வாழும் மக்கள் அதை அச்சத்தில் வழிபடும் கோணம் என்றென்றும் நிலைக்கும் படிமங்களால் நிறைந்து கிடக்கிறது. பார்வையாளர்களின் அறிவை மெச்சி திரைப்படம் எடுப்பதில் இந்நூற்றாண்டின் முக்கிய படைப்பாளிகளுள் லாவ் டயஸ் முன்னோடி என்பதில் சற்றும் ஐயம் இல்லை. வெகு குறைவான தொழில்நுட்ப ஆட்களோடு பணியாற்றுவது அவருக்கான கூரிய அவதானிப்பைப் பெற்று தருகிறது. அவர் தேர்ந்தெடுக்கும் சட்டகங்கள் தனியரால் அல்லது ஓரிருவரால் நிறைவேற்றப்படுபவை. கும்பல் சேரச்சேர கசடுகள் பெருகி சட்டகத்தில் பதற்றம் நிறைந்துவிடும் என்பதைத் தெளிவாக அறிந்திருக்கிறார் டயஸ்.

தொன்மையான நம்பிக்கைகள் மாறாது தொடரும் அந்த குக்கிராமத்திலும் கூட கிறித்துவத்தின் கைகள் நீண்டிருப்பதும் புனைவாகி இருக்கிறது. இடாங், ஜோஸலினாவை வைத்து சிகிச்சை தரும் நம்பிக்கைக்குத் தங்களை அனுமதிக்குமாறு பாதிரியாரிடம் கேட்கிறாள். அவரும் அதற்கு ஒப்புதல் வழங்குகிறார். அந்த ஒரு கருணைக்கு அவரிடம் மட்டும் விடைபெறுகிறாள். அவர் கிறித்தவத்தை விமர்சிக்கவில்லை. ஆயினும் கைவிடப்படுதலின் உண்மையை தலையில் அடித்து சொல்வதால் அதற்குக் கிறித்துவும் தலைகுனிந்தாக வேண்டிய நிலை கதையின்உட்பொதியாய் நிகழ்கிறது.

மக்கள் விரோத அரசை விமர்சிக்கும் அங்கம் நிச்சயம் படத்தில் இருக்கிறது என்றபோதும், ஒருபோதும்அது பிரச்சார தொனியை அடைந்து, தற்சாய்வுகளை நோக்கி நகரவில்லை என்பது பெரிய செய்தி. அதுவே இத்திரைப்படத்தை குறுகிய காலகட்டங்களுக்குள் சுருக்கிவிடாத கூறாக இருக்கும். அதனாலேயே இப்படம், 21ம் நூற்றாண்டின் சிறந்த திரைப்படங்களுள் ஒன்றாக என்றும் நினைவு கூரப்படும். அரசியல் விமர்சனங்களைப் பொறுத்தமட்டில், இந்த படத்தில் இருந்து இன்னும் வீரியத்துடன் எழுந்து Season Of The Devil (2020) திரைப்படத்தில் நேரடியாகவும் இன்னும் ஆக்ரோசத்துடனும் பேசியிருக்கிறார் லாவ் டயஸ். மார்கோஸ் அரசின் நெருக்கடி நிலைப் பிரகடனத்திற்கு எதிர் குரலான அத்திரைப்படம் ஒரு இசைவகைமை. அது இசைவகைமையாக இருப்பதும், ஆங்காங்கே மீயுண்மை காட்சிகள் கொண்டிருந்ததும் அதன் குறைபாடு. ஆனால், From What Is Before அடைந்திருக்கும் கலையமைதி அதை விட இன்னும் பன்மடங்கு பெரியது.

Lav Diaz

338 நிமிடங்களில் ஒரு நிமிடம் கூட வீணடிக்கப்படவில்லை என்பதைத் திரைப்படத்தைக் கலையாகக் காணும் கண்கொண்ட எவரும் எளிதில் உணர்வர். தொடங்கிய முதல் காட்சியில் இருந்தே இயற்கை பேருரு கொள்வதை எதிர்பாராத கோணங்களில் காட்டி இருக்கிறார். மழைக்காக பூசைக்காரி ஆடும் மரபு நடனம், மெழுகொளியில் மனைவியைச் சிசுவோடு கொல்ல நினைத்த வெறியனைப் பற்றி வாய்மொழியாகச் சொல்லும் கதை, சிறைபட்டவர்களுக்குச் சித்ரவதைகளை மகிழ்ந்து ஊட்டும் ராணுவத்தனம் என்று முடிவில்லாத வலியைப் பெருக்கும் காட்சிகள் படம் நெடுக நிறைந்திருக்கின்றன. இந்தியப் பெருங்கடலைக் கடக்கும் தொலைவில் வாழும் லாவ் டயஸை அகத்திரையில் கட்டியணைக்கிறேன்.

(நீலம் ஆகஸ்ட் 2021 இதழில் வெளிவந்த கட்டுரை)

தீக்காயமுற்ற பிள்ளைகளின் அவதாரங்கள்

பிள்ளையின் அலறலும் அம்மாவின் அழுகைக்குரலும் உச்சத்தை அடைந்த போது, தந்தை வீட்டின் பக்கவாட்டுப் பகுதியில் வாடகைப்பகுதிக்கான கதவைப் பொருத்திகொண்டிருந்தார். அவர் கொல்லைப்புற திண்ணையின் வழியே நேரடியாக சமையலறைக்கு விரைந்து வர முடிந்தது. உள்ளே வந்ததும், பின்னால் கதவு சாத்திக்கொள்ளுவதற்கு முன்பாகவே அங்கிருந்த காட்சியை முற்றாக கிரகித்துக்கொண்டார். தரையோடுகளில், அடுப்புக்கும் எரிப்பானுக்கும் முன்பாகத் தலைகீழாய் கிடந்த பாத்திரத்தையும் தரையில் கொட்டி இருந்த நீரிலிருந்து தன் பல கைகளை விரித்தெழுவதைப் போல கொதிநீராவி மேலேறிக்கொண்டிருப்பதையும் பார்த்தார்.

தளர்வான அரையாடை அணிதிருந்த பிள்ளையின் தலைமுடி, மார்பு, சிவந்த தோள் அனைத்திலிருந்தும் கொதிநீராவி பறக்க பறக்க பிள்ளை விரைத்திருந்தான். அவன் வாயானது, அதிலிருந்து வெளிப்பட்ட பேரோல ஒலியை விட பயங்கரமாக அகலத் திறந்திருந்தது. அம்மா ஒரு காலை மடக்கி ஊன்றி, அவனது அழுகையுடன் பொருந்தி தானும் அழுதபடி, செய்வதறியாதவளாய், கந்தல் துணியொன்றை வைத்து அவன் காயங்களை ஒற்றியெடுத்தாள். அவள் தன்னிலை அறியாது உறைந்த பைத்தியம் போல அழுதாள். ஆவியெழும் நீர் மீது அவளது ஒரு முழங்காலும் அதன் மெல்லிய பாதங்களும் நேரடியாக பட்டன. பிள்ளையின் கைகளுக்குக் கீழே பிடித்து தூக்கி அங்கிருந்து அகற்றி, பாத்திரம் கழுவும் தொட்டிக்குத் தூக்கிச் செல்வதே தந்தையின் முதல் பணியாக இருந்தது. அங்கிருந்த தட்டுகளை எடுத்து எறிந்துவிட்டு, குழாயைத் திறந்து குளிர்நீரை சிறுவனின் கால்களில் படும்படி செய்தார். தனது கைகளைக் குழியாக்கி அதில் கொஞ்சம் குளிர்நீரைச் சேகரித்து அவன் தலை, தோள், மார்பு என சூடுபட்ட அனைத்து இடங்களிலும் ஊற்றி, முதலில் அவன் மேலிருந்து வரும்  ஆவியை நிறுத்த முற்பட்டார்.

மெல்லிய பருத்தித் துண்டையோ, பஞ்சையோ தேடி எடுத்துவரும்படி அவளிடம் பணிக்கும்வரை, அவரது தோளின் மேல் எட்டிப் பார்த்தவாறு கடவுளை அபயத்திற்கு அழைத்திருந்தாள் அம்மா. தந்தை வேகமாகவும் கவனத்துடனும் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவரது ஆண் மனதில், காரிய நோக்கத்தைத் தவிர வேறெதைப் பற்றியும் துளிச்சிந்தனை இருக்கவில்லை; தான் எப்படி இத்தனை லாகவமாக வேலை செய்கிறோம் என்பதோ, பிள்ளை வலியால் கதறும் ஒலியோ அவர் மனத்தில் எழவில்லை. காரணம் அந்த அழுகையில் கவனத்தைக் குவித்தால் தான் செய்ய வேண்டிய செயல், உணர்ச்சிவசப்பட்டு தடைபட நேரலாம் என்றெண்ணினார். ஆனால், பிள்ளையோ மூச்சின் லயத்திலேயே தொடர்ந்து கடுமையாக அழுதுகொண்டிருந்தான். அவன் அழுகையே சமையலறையின் சுவர்களைச் சிதறடித்தது; அவனை உடனே அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கான அறிவிப்பு போலிருந்தது.

வாடகைப்பகுதியில் அரைகுறையாகப் பொருத்தியிருந்த பக்கவாட்டுக் கதவின் மேல்புறம் பகுதி பொருந்தி கீழ்புறம் சாய்ந்து தொங்கியது. காற்றில் மெல்ல அசைந்தது. சாலையில் இருந்த ஓக் மரத்து பறவை, உள்ளிருந்து இன்னும் தொடர்ந்து வந்த ஒலிகளைக் கேட்பது போல தன் தலையை முன்னீட்டியது. வலது கையிலும் தோளிலும் மார்பிலும் பிள்ளைக்குக் கடுமையான சூட்டுக்காயங்கள். ஆராய்ந்ததில், அவன் மென்பாதங்கள் எதிலும் பொக்குளங்கள் இருப்பதாகத் தந்தையின் கண்ணில் படவில்லை. வயிற்று சிவப்பு, குளிர் நீரால் வெளிர்சிவப்பாக மாறி வந்தது. ஆனால் இன்னும் சிறுவனுடைய கைகள் நடுங்கின. அழுகையும் அச்சம் குறையாததால் அணிச்சையாக அலறல் வந்தபடியே இருந்தது. அச்சத்தினாலேயே அழுகிறான் என்று அவர் அறிந்திருந்தார் – பின்னால் அப்படி இருக்கக்கூடும் என்று தான் ஊகித்ததைப் புரிந்துகொண்டார்.  சிறிய முகம் வீக்கமுற்று, நூல் போன்ற மெல்லிய நாளங்கள் புடைத்திருப்பது நெற்றியில் தெளிவாகத் தெரிந்தன. தான் அருகில் இருப்பதாகத் தந்தை தொடர்ந்து ஆறுதல் சொன்னாலும் அவருக்குள் அட்ரினலீன் சுரப்பு பெருக்கெடுத்தது. இந்த நிலையைத் தவிர்த்திருக்க வேண்டிய அம்மாவின் மீது, அவரது ஆழ்மனத்தில் மெல்ல மெல்ல சினம் பெருகியது. அது வெளிப்பட இன்னும் சில மணி நேரங்கள் இருந்தது.

அம்மா திரும்பி வந்த போது சிறுவனைத் துண்டால் சுற்றுவதா வேண்டாமா என்ற குழப்பத்திற்குச் சற்று நேரம் ஆளானார், என்றபோதும் அந்த துண்டை நீரில் நனைத்து அவனை உறைபோலச் சுற்றி, இறுக்கினார். அவனைக் கழுவுதொட்டியிலிருந்து தூக்கி சமையலறையில் இருந்த மேசையின் முனையில் உட்கார வைத்து, அமைதிப்படுத்த விரும்பினார். அம்மா, அவனது பாதத்தை ஒரு கையால் பிடித்து பொக்குளங்கள் உள்ளனவா என்று ஆய்ந்தாள். மறுகையைத் தன் வாயினருகே வைத்து பொருளற்ற பல சொற்களைப் பிதற்றினாள். தந்தை குனிந்து பிள்ளையின் முகத்திற்கு நேராகத் தன் முகத்தை வைத்து மீண்டும் தான் இருப்பதாகச் சொல்லி அவனை அமைதிப்படுத்த முயன்றவாறிருக்க பிள்ளையோ விடாமல் அழுதிருந்தான். அவனது அழுகையில் இருந்த மேன்மையான தூய ஒலி இதயத்தைக் கனக்கச் செய்வதாக இருந்தது. அவன் கடித்து அழுத உதடுகளும் பல்லின் ஈறுகளும் மென் தீயின் நீலநிறத்தில் இருந்தது. இன்னும் இடறிவிழுந்த பானையிலிருப்பதைப் போலவே அவன் வலியை உணர்கிறான் என்று தோன்றியது.

மரக்கிளையில் பறவை தன் தலையை ஒரு புறம் சாய்த்து ஆட, பாதி பொருத்திய கதவு காற்றில் எடை தாளாது சாய்ந்து அசைய, அன்னையும் தந்தையும் குழந்தையின் முகத்தினருகே தம் முகத்தை வைத்து அமைதிக்குப் பாட்டு போல ஆறுதல் கூற இந்த ஓரிரு நிமிடங்கள் நெடுங்காலமாக விரிந்தன. சுற்றப்பட்ட துண்டைத் தாண்டி பிட்டப்பகுதியில் இருந்து மட்டும் இப்போது அனல் எழுந்தபடி இருக்க அன்னை தந்தையின் அகல்விழிகள் சந்தித்தன. அரையாடை! துண்டைக் கழற்றி, கட்டமிட்ட துணியை மேசையில் விரித்து தம் அன்பு மகனைக் அதில் கிடத்தினர். அரையாடையில் நொய்ந்திருந்த முடிச்சுகளை மெல்ல கழற்ற முயலவே, அதை எதிர்ப்பது போல அவனில் இருந்து இன்னும் கொடுரமாக அலறல் எழுந்தது. அவர்களது கைகளைச் சுட்டுவிடும் அளவு கொதித்தது அரையாடை. அப்போதுதான் உண்மையில் சுடுநீர் எங்கே சேகரமாகி இத்தனை நேரம் பிள்ளையை அவதிபடுத்தி இருக்கிறது என்பது தெரிந்தது. அவன் உதவிக்காக இத்தனை நேரம் அழுதபோதெல்லாம் உண்மையான பிரச்சனையை விட்டு வேறேதோ செய்து வந்ததை எண்ணி வருந்தினர். அன்னை, கடவுளைப் பெயர் சொல்லி அழைத்தவாறு மேசையை இறுகப் பற்றிக் கொள்ள, தந்தை பிரச்சனைக்குக் காரணமான துணியை மெல்ல கழற்றி சமையலறையில் தூக்கி எறிந்தார். தன்னையும் உலகையும் தொடர்ந்து சபித்தார். தற்போது மெல்லிய கையசைவுகளையும் மூச்சிழுப்பு வேகத்தையும் பார்த்த போது, இனிமையாக உறங்கி இருந்திருக்க வேண்டிய பிள்ளைக்கு இத்தகைய கொடுமையா என்று தோன்றியது. வளர்ந்த மனிதனின் கட்டைவிரல் சுற்றளவுக்கு இருந்த அந்த பிஞ்சு கைகள் தொட்டிலில் படுத்தபடி தந்தையின் கைகளைப் பற்றியிருந்திருக்கும்; தந்தையின் வாயசைவில் துலங்கும் பாடலைக் கேட்டவாறிருந்திருக்கும். அவர் தலையைச் சாய்த்து அவன் விழிகளில் கண்டபோது, அவனையும் கடந்து அப்பால் தெரிந்த ஏதோவொன்று தந்தையைக் கொடுஞ்சிறுதனியனாக உணரச் செய்தது.

நீங்கள் ஒருபோதும் அழுததில்லை என்றால் குழந்தை பெற்று பாருங்கள்! வானொலியின் ஒலிபரப்பில் ரீங்கரிக்கும் பாடலில் இருந்து வந்து சேர்ந்த பெண்மணி அவர்கள் செய்திருக்கும் கோலத்தை நேரிலேயே காண வந்தாள். பிள்ளைக்கு அரையாடை அணிவித்து கூடவே இரண்டு கைத்துண்டுகளைப் போட்டு மூடிய அத்தருணத்தில் சிகரெட் பிடித்தாக வேண்டும் என்று அடக்கமுடியாத உந்தம் ஏற்பட்ட மனநிலையை அவராலேயே சகிக்க முடியவில்லை. அவனது தலைக்குப் பின் சிசுவைத் தூக்குவது போல தன் வலது உள்ளங்கையையை வைத்து தூக்கிய அவர் ஓடிச்சென்று தன் சூடான வண்டியில் ஏற்றி, ரப்பர் சக்கரங்களை எரித்துக்கொண்டே நகரத்தில் இருந்த மருத்துவ மையத்திற்கு விரைந்தார். அன்று முழுவதும் சாய்ந்து தொங்கிய வாடகை பகுதியின் கதவு, நெடுநேரம் கழித்து அதன் எடை தாளாமல் பிய்ந்து விழுந்தது. அதைத் தவிர்த்திருக்க முடியாத அளவிற்கு காலம் கடந்திருந்தது. எதையும் நிறுத்த முடியாது, யாரும் எதையும் செய்ய முடியாது என்ற தருணத்தில் தன்னை விட்டு தானே விலகத் தெரிந்து கொண்ட பிள்ளை தன் முன்பு, தலையுச்சிக்கு மேலிருந்த கோணத்தில் அனைவரையும் பார்க்கும் வாய்ப்பை மெல்ல அறிந்துகொண்டது. அதுவரை தொலைந்து போனவற்றை எதையும் இனி ஒரு பொருட்டாக ஒருபோதும் கொள்ளப்போவதில்லை. பிள்ளையின் உடல் விரிவடைந்து, வெளியேறி நடந்து, உரிய ஊதியம் பெற்றதைப் போல, வாடகையற்ற வாழ்விற்குத் தயாரானது. அதன் சுயான்மா நீராவியால் நிறைந்து மேலெழும்பி பின் மழையாகப் பொழிவதும் மீண்டும் மேலெழுவதுமாக இருந்தது. யோயோவைப் போல் சூரியனும் உதித்து மறைந்து வந்தது.

ஆங்கில மூலம் : டேவிட் ஃபாஸ்டர் வாலேஸ்.

நாள் : 25.04.2021                                                       தமிழில் : கோ.கமலக்கண்ணன்.

காற்று (சிறுகதை)

உலகாளும் பேரரசன் பாதுகையற்ற வெண்பாதங்களைச் சரணமடைந்து பணிவுடன் வீழ்ந்து கிடப்பதை எண்ணிய போது வைதேகி புத்திரனின் உடல் விதிர்ப்புற்றது. அவனது பெருமிதத்தால் பழக்கப்பட்ட மனம் இத்தகு சரணாகதிக்கு அவ்வளவு பூரணத்துடன் ஒப்பவில்லை. ஆயினும் தானறிய இயலாத பெருவெளியின் குணங்களுள் ஒன்றைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பாதத்தை அண்டும் வழக்கம் மானுடத்தின் ஆழங்களில் தவிர்க்கவியலாமல் உறைகிறது. இறை நம்பிக்கை அற்றவர் கூட சக மனிதன் ஒருவனைக் … Continue reading காற்று (சிறுகதை)

பேய்மழை

குழந்தைகளின் வழியே உலகைக் காணும் கண்கள் எத்தனை புதுமையானதாகிவிடுகிறது. அவர்களின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் தனலெரிப் பாலையில் எப்படியெல்லாம் நீரள்ளித் தெளித்துத் தணுமை கூட்டுகிறது. வாழ்வின் தீராச்சலிப்பை ஒரு குதலையின் புன்னகை எப்படி தூசு போல ஊதித் தள்ளிவிடுகிறது. ஒவ்வொரு உயிரினமும் தன் பிம்பங்களை நீரில் பார்பதைப் போல் தன் வாழ்வின் பிம்பத்தை பிஞ்சுகளில் கண்டு கொள்ளும் சுவை இனிப்பிற்கும் மேலான ஒன்றல்லவா. … Continue reading பேய்மழை

ஒரு பிரகாசமான கோடை தினம்

இரண்டே இரண்டு வீடுகள் மட்டுமே மலையுச்சியில் நின்றிருந்தன. சொல்லப்போனால் அது ஒற்றை கட்டிடம்தான், காலத்தின் ஏதோ ஒரு புள்ளியில் ஒரு நாள் அதன் சொந்தக்காரர் அதன் நடுவே ஒரு மென்சுவற்றை எழுப்ப, இப்போது இரண்டு பகுதிகளிலிலும் இரண்டு குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. மலைவீடுகள் எல்லாம் அளவில் சிறியதாகவே இருக்கும், அதனால் – இந்த குறைக்கப்பட்ட இருப்பிட அளவு – அதில் வசிப்பவர்கள் ஏமாற்றமடையவே … Continue reading ஒரு பிரகாசமான கோடை தினம்

கோகோலின் மனைவி (சிறுகதை)

இந்த நொடியில் முற்றிலும் சிக்கலான, நிகோலாய் வசிலிவிட்சின் மனைவியின் காதல் விவகாரத்தை எளிதாகக் கடந்து எதிர்கொள்ள இயலாதபடி தயக்கம் மேலிடுகிறது. என்னால் மறக்க இயலாத நண்பன் அவருக்குள்ளேயே ரகசியமாய் மறைத்து வைத்திருந்த ஒன்றை (அதை மறைத்து வைக்க அவருக்கென காரணங்கள் இருந்தன), இதுவரை இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாத அந்த ஒன்றை நான் வெளிச்சொல்ல எனக்கேதும் உரிமை உண்டா? அதை வெளிச்சொன்னால் அது … Continue reading கோகோலின் மனைவி (சிறுகதை)

சிலை (சிறுகதை)

அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். அவள் நடையை நிறுத்திவிட்டு ஷந்தார் துணிக் கடைக்குள் நுழைந்தாள். காட்சி சாளரத்தின் கதவைத் திறந்து இலாவகமாக மாதிரியாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொம்மையை அகற்றிவிட்டு அந்த நெகிழி பொம்மை இருந்த இடத்தில் அதன் தோரணையிலேயே தான் நின்று கொண்டாள். மாலை ஆகிவிட்டிருந்தது. தெருமுழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதிய போதும் அவர்கள் அனைவருமே தத்தம் … Continue reading சிலை (சிறுகதை)

மரம் (சிறுகதை)

நான் தனிமையை விரும்புபவன். என்னைச் சந்திக்க யாரும் வருவதில்லை, நானும் யாரையும் சந்திப்பதில்லை. காலையில் என் எண்ணங்கள் என்னை எங்கு அழைக்கிறதோ, அங்கு தொடங்கி எனக்கு நிறுத்த வேண்டும் என்று தோன்றுகையில் நிறுத்தி விடுவதுண்டு. நான் எப்போதும் தோன்றிய திசையில் செல்பவன். நான் சொல்லும் எதற்கும் யாரும் பதிலளிப்பதை நான் விரும்புவதில்லை, அதுபோலவே என்னிடமிருந்து பதிலை யாரும் எதிர்பார்ப்பதையும். இதன் காரணமாகத்தான் எனது … Continue reading மரம் (சிறுகதை)

உறுபிணி (சிறுகதை)

உலகம் வழமை போல ஓரிருவர் தெருக்களில் நடமாடுவதும் தங்கள் இருபதுகளில் இருக்கும்  சிலர் பணிக்கு விரைவதும் முப்பதுகளைக் கடந்து விட்ட முதியவர்கள் வீட்டில் அமர்ந்து சாளரத்திற்கு வெளியே இருக்கும் வெறிச்சோடலையோ தொலைக்காட்சியில் தாங்கள் விரும்பும் பழைய வன் தட்டுக்களில் உள்ள திரைப்படங்களையோ பார்த்துக் கொண்டிருப்பதும் என்று அன்றும் இயல்பாகவே இருந்தது. தங்கள் பெற்றோருக்கான இறுதி சடங்குகளைத் தவறாமல் செய்வதற்காகவும் தங்கள் சுற்றத்தார் மற்றும் … Continue reading உறுபிணி (சிறுகதை)

தற்தீண்டல்

தற்தீண்டல் (Auto Contact) என்பது நாமே நமதேயான உடலைத் தொடுகை செய்யும் பண்பு. வேறு யாரொருவருடைய உடலையோ நாம் தொடும் போது நிகழ்கிற பிறர்-தீண்டலுக்கு (Allo Contact) மாறாக இது நடைபெறுகிறது. வேறொரு நபர் மீது உடற் தொடுகை மேற்கொள்வது நம்மால் பொருட்படுத்தப்படாமல் நடைபெறும் ஒன்றல்ல, மாறாக, நட்ப்பார்ந்த தட்டல், அன்பான வருடுதல் அல்லது மூர்க்கமான அடித்தல் என  எதுவாயினும், பெரும்பாலும் நாம் … Continue reading தற்தீண்டல்