இந்த நொடியில் முற்றிலும் சிக்கலான, நிகோலாய் வசிலிவிட்சின் மனைவியின் காதல் விவகாரத்தை எளிதாகக் கடந்து எதிர்கொள்ள இயலாதபடி தயக்கம் மேலிடுகிறது. என்னால் மறக்க இயலாத நண்பன் அவருக்குள்ளேயே ரகசியமாய் மறைத்து வைத்திருந்த ஒன்றை (அதை மறைத்து வைக்க அவருக்கென காரணங்கள் இருந்தன), இதுவரை இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாத அந்த ஒன்றை நான் வெளிச்சொல்ல எனக்கேதும் உரிமை உண்டா? அதை வெளிச்சொன்னால் அது எல்லாவிதமான கெட்டெண்ணம் கொண்ட, முட்டாள்தனமான புரிதல்களுக்கும் வழிவகுக்கும் என்பது மட்டும் நிச்சயமாக எனக்கு தெரிகிறது. அதைவிட, அந்த ஒன்று அநேகமாக எல்லாவிதமான மக்களின், அதாவது பாசாங்குத்தனம் கொண்ட, ஏன் சில சமயங்களில் நேர்மையான (ஒருவேளை அப்படி யாரும் மிச்சம் இருக்கிறார்களா என்ன?) மக்களின் உணர்வுகளைக் கூட புண்படுத்தும். இறுதியாக, எந்த ஒன்றின் முன் என் ஆன்மாவே சுருளவிழ்கிறதோ,மேலதிகமாக, ஏறத்தாழ ஒரு வெளிப்படையான மறுப்பை நோக்கி முனைகிறதோ அதை வெளிக்கொணர எனக்கு ஏதும் உரிமை உள்ளதா? ஆனால் உண்மையில் ஒரு வாழ்கைவரலாற்று ஆய்வாளனாக எனக்கு சில தீர்க்கமான கடமைகள் இருக்கின்றன. காலத்தின் முடிவு வரைகூட அறிவுப்பூர்வமாகவோ, நடுநிலையாகவோ தீர்வு இடப்படும் என்ற நம்பிக்கையே இல்லாது போகும் என்றால் கூட என்னால் அதை மறைக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு சின்னச் சின்ன செய்திகளும் கூட, உயர்ந்த மேதையிடமிருந்து வந்து நமக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நிச்சயம் பெரிய பயனை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம். மேலும், கண்டிப்பதற்கு நமக்கேது உரிமை? உயர்ந்த மேதைகளின் செயல்கள், ஒரு வேளை கீழ்த்தரமானதாக நம் கண்களுக்குப் பட்டாலும், அது நமக்கு தரப்பட்டது, நெருக்கமான தேவைகள் என்பதென்ன என்பதைத் தெரிந்து கொள்ள மட்டுமல்ல, அவை, பயன் தரும் உச்சங்களையும் பரவல்களையும் தெரிவிக்கத்தானோ? உண்மையில், இந்த இயல்பான சலுகைகளை உண்மையாகவே நாம் வெகு குறைச்சலாகத்தான் புரிந்துகொள்கிறோம். ‘இது நிஜம்.’ ஒரு சிறந்த மனிதன் சொன்னான் ‘எனக்கும் மூத்திரம் கழிக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் வேறுபட்ட காரணங்களுக்காக’. அதிக சந்தடிகளேதுமின்றி, இந்த சர்ச்சைக்குரிய விசயம்பற்றி, சந்தேகமின்றி எனக்குத் தெரிகின்ற, சந்தேகங்களைத் தாண்டி நிருபிக்க முடிகின்றவற்றையெல்லாம் – இதுவரை இல்லாத தைரியத்துடன் வெளிக்கொணரப் போகிறேன். ஏற்கனவே இதுபற்றி தெரிந்தவற்றைத் தொகுத்துரைத்து தொந்தரவு செய்ய போவதில்லை. ஏனென்றால் கோகோல் ஆய்வுகளின் இந்த வளர்ச்சி நிலைக்கு இது அத்தியாவசியம் என்று நான் நினைக்கவில்லை.
ஒரே போடாக சொல்லிவிடுகிறேன்: நிகோலாய் வசிலிவிட்சின் மனைவி ஒரு பெண்ணல்ல. மனிதன், மிருகம் அல்லது காய்கறி (ஒரு சில சமயங்களில் அது போன்ற சில குறிப்புகள் இருந்தாலும்) போன்ற எந்தவிதமான ஜீவனும், அல்லவே அல்ல. ரொம்ப எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால் அவள் ஒரு பலூன். ஆமாம், ஒரு பலூன்: அந்த மேதையின் நண்பர்களாகவும் இருந்த சில வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள், அவளை ஒரு போதும் பார்த்ததுமில்லை எனவும், ‘அவள் குரலைக் கூட ஒருபோதும் கேட்டதே இல்லை’ எனவும் புகார் சொன்னதன் குழப்பத்தன்மையையும் அவர்கள் கொதித்தெழுந்ததையும் நிச்சயம் இது விளக்கும். இதன் மூலமாகவே அனைத்து விதமான பிரச்சனைகளையும் அவமானத்திற்குரிய குழப்பங்களையும் அவர்கள் ஊகித்தனர் – ஆமாம். குற்றச்சாட்டுக்கு உரியனவற்றைக் கூட ! இல்லை, பெரியமனிதர்களே எல்லாமே தோன்றுவதை விட மிகவும் எளிமையானவைதாம். நீங்கள் அவள் குரலைக் கேட்காததற்கு, அவள் பேசும் திறனற்றவள் அல்லது தெளிவாகச் சொன்னால், நாம் தொடர்ந்து பார்க்கப்போவதைப் போல சில இடங்களில் மட்டுமே அவள் பேசக்கூடியவள் என்பதே காரணம். ஆனால் இது கடைசிவரை எப்போதும் இப்படித்தான், நிகோலாய் வசிலிவிட்சுடன் ஒரேயொருமுறை காதும் காதுமென இருந்ததைத் தவிர. எனவே பயனில்லாத கீழ்த்தரமான மறுதலிப்புகளுடன் நம் நேரத்தை வீணடிக்காமல், ஒரேயடியாக, துல்லியமான முழுமையான விவரணங்களை, கேள்விகளுக்கான பொருளை சாத்தியப்படும் வகையில் அவதானிப்போம்.
கோகோலின் மனைவியாக அறியப்பட்டவள் – தடிமனான ரப்பராலான, எல்லா பருவங்களிலும் நிர்வாணமாக இருந்த, பொலிவான லேசான நிறத்துடன் கூடிய – பொதுவாக தசையின் நிறமென அறியப்பட்ட நிறத்தில், இருந்த ஒரு சாதாரண போலி. பெண்களின் தோலானது வெவ்வேறு வகை நிறத்தில் இருப்பதால், அவளின் நிறம் மெல்லிய வண்ணமுடைய, பளபளப்பான தோலுடன், மாநிறமாய் இருந்தது என்பதை நான் குறிப்பிடவேண்டியதாகிறது. அது அல்லது அவள் – நிச்சயமாக குறிப்பிட்டு சொல்லவேண்டியதில்லை எனினும் – ஒரு பெண்பாலினத்தவள். தன் பாலினத்தைத் தவிர, மற்ற பண்புகளனைத்தையும் பல அநேக விதங்களில் மாற்றம் செய்துகொள்ளும் திறன் பெற்றவளாக அவள் இருந்தாள் என்பதை தவறாமல் நான் சொல்லியாக வேண்டும். பெண்ணாக இருப்பதை விட, சில சமயங்களில் ஏறத்தாழ முலைகள் ஏதுமில்லாத, குறுகலான இடுப்புடைய ஒல்லியான வளரிளம் இளைஞன்போல, தோற்றமளிக்க அவளால் இயலும், சில சமயங்களில் அதிகப்படியான, போதுமான, எடையுடன் கூடிய அல்லது – துண்டு துண்டாக சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம் – குண்டாக தோற்றமளிப்பாள். வெவ்வேறு சமயங்களில், தன் தலையில் அல்லது உடலின் பிற பாகங்களில் இருக்கும் முடியின் நிறத்தை அடிக்கடி மாற்றினாள். அவளுக்கு எல்லா விதமான சின்ன சின்ன விசயங்களைக் கூட- அதாவது, மச்சங்களின் இருப்பிடம், கோழைப்படலத்தின் முக்கியத்துவம் போன்றவற்றைக் கூட- மாற்றிக்கொள்ளும் திறன் இருந்தது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தன் தோலின் நிறத்தைக் கூட மாற்றிக் கொள்ள அவளால் முடிந்தது.`அவள் உண்மையிலேயே யார்?` அல்லது ஒருவேளை ‘ஒரு நபரைப்’ பற்றி பேசுவதாக நினைப்பதும் சரியானதாக இருக்குமா? என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளும் தேவை இருந்தது – உண்மையில் இந்த குறிப்பை அழுந்தக்கூறுவது, விவேகமற்ற ஒன்றாக இருக்கும் என்பதை நாம் தொடர்ந்து பார்க்கவிருக்கிறோம்.
இந்த மாற்றங்களுக்கான காரணம், எனது வாசகர்கள் ஏற்கனவவே புரிந்துகொண்டதைப்போல் நிகோலாய் வசிலிவிட்சின் தன்விருப்பமே அன்றி வேறேதுமில்லை. அவர் அவளை பெரிய அல்லது சிறிய அளவுகளுக்கு ஊதிப்பெரிதாக்குவார், அவளது சவுரி அல்லது குடுமிகளை மாற்றிப்பார்ப்பார், அவள் மீது களிம்புகளைப் பூசுவார், அவளைப் பல்வேறு விதங்களில் தொட்டு, அவருக்கு அந்த கனத்தில் ஏறத்தாழ பொருத்தமான பெண்ணென தோன்றும் ஒரு உருவத்திற்கு அருகேயான ஒரு வடிவத்தைப் பெற்றிட முனைவார். அவரது ஆடம்பரமான எண்ணங்களைத் தொடர்ந்து, அவலட்சணமான, அரக்கத்தனமான வடிவங்களை உருவாக்குவதன் மூலம் அவர் தன்னை மகிழ்வித்துக் கொண்டார்; நமக்கு உடனே புரிவதுபோல, அவள் ஒரு குறிப்பிட்ட புள்ளியைத் தாண்டி ஊதப்படுகையிலும், ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தின் கீழ் நிலைத்து இருக்கையிலும் உருக்குலைந்து போய்விடுவாள்.

ஆனால் விரைவிலேயே கோகோல் இந்த சோதனைகளில் ஆர்வமிழந்தார். அது அவர் மனைவிக்கு ‘கடைசியாக, மரியாதைக்குறைவானது’ என்று எண்ணம் கொண்டார், அவர் தன் தனித்துவமான வகையில் அவளைக் காதலித்தார் – இருப்பினும் நம் அறிவுக்கெட்டாததாகவே அது இருக்கிறது. அவர் அவளை விரும்பினார், ஆனால் அவளுள் இருந்த எந்த அவதாரத்தை ? இதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளலாம்! அந்தோ! இந்த கதையின் முடிவு ஒரளவிற்கு பதில் தரும் என்று நான் முன்பே சுட்டிக்காட்டியிருக்கிறேன். நிகோலாய் வசிலிவிட்சின் விருப்பம்தான் அந்த பெண்ணை ஆண்டதென எப்படி நான் இதற்கு முன் சொல்லலாகும்? ஒரு விதத்தில், ஆம் அது உண்மைதான்; ஆனால் வெகு விரைவிலேயே அவள் அவரது அடிமையாக இல்லை கொடுங்கோன்மைவாதியாக மாறிவிட்டிருந்தாள் என்பது சரிசமமான உண்மை. இங்குதான் கொட்டாவியின் பள்ளம் அல்லது – நீங்கள் சொல்ல விரும்பினால்- நரகத்தின் தாடைகள் உருவாகிறது– ஆனால் நாம் அதை எதிர்பார்க்க வேண்டாம்.
ஏறத்தாழ பெண்போன்ற வகையினை ஒவ்வொரு காலத்திலும் தன் தேவைக்கேற்ப தன் கையாளுகையினால் கோகோல் உருவாக்கினார் என்பதை நான் சொல்லியிருந்தேன். இங்கு கூடுதலாக நான் ஒன்றைச் சொல்ல வேண்டும், அதியரிய தருணங்களில், அவரது இச்சையின் அவதாரமாக அவர் அந்த வடிவத்தை உருவாக்கினார், நிகோலாய் வசிலிவிட்ச் அவளுடன் -அவர் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் “பிரத்யேகமாக” காதலில் விழுந்திருந்தார் – ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவளை நிலைத்தன்மையுடன் காண இது போதும் – அவர் அவளிடமான காதலிலிருந்து மீளும் வரை. அந்த சிறந்த எழுத்தாளரின் வாழ்வில் (இல்லற வாழ்வில் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியுமா?) நான் இதுபோன்று மூன்று அல்லது நான்குக்கு மிகாத பலவந்தமான பேரார்வங்களைக் கண்டிருக்கிறேன் – அல்லது இன்று குறிப்பிடப்படுவது போல பாலியல் ஈர்ப்பு எனவும் சொல்லலாம். இங்கு இதைச் சொல்வதும் மிகவும் உசிதமானது. அவரது திருமணம் என்று எவரும் சொல்லக்கூடியதைத் தொடர்ந்த சில வருடங்களில், கோகோல் அவரது மனைவிக்கு ஒரு பெயரினை வழங்கி இருந்தார். அது, கராகஸ்! நான் தவறாகச் சொல்லவில்லை என்றால், அது வெனிசுலா நாட்டின் தலைநகரம். என்னால் இந்த பெயருக்கான தேர்வின் காரணத்தை எப்போதும் கண்டுபிடிக்க முடிந்ததே இல்லை: ‘சிறந்த மனங்கள் எப்போதும் அதிக சலன புத்திகொண்டவை!’
அவளது பொதுவான தோற்றத்தைப் பற்றி பேசும்போது, கராகஸ் சரிவிகிதமான நல்ல வடிவம்கொண்ட ஒரு அழகிய பெண்ணாகத்தான் இருந்தாள். உரிய இடங்களில் தகுந்த அமைவு பெற்று மிகச் சிறிய பண்புகளில் கூட அவள் பாலினத்திற்கே உரியவாறு இருந்தாள். சிறப்பாக குறிப்பிட வேண்டுமென்றால் அவளது இனப்பெருக்க உறுப்புகள் (இந்த உவமை இவ்விடத்திற்கு அனுமதிக்கப்பட்டால்). அவை ரப்பரின் தனித்துவமான மடிப்புகளால் உருவாகி இருந்தது. எதுவும் மறக்கப்படவில்லை, மேலும் அதன் செயல்பாடுகள் வெவ்வேறு உபகரணங்களாலும், காற்றின் உள்ளழுத்தத்தாலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கராகஸுக்கு ஒரு எலும்புக்கூடும் இருந்தது, ஆரம்ப நிலையிலான ஒன்று. ஒருவேளை திமிங்கலத்தின் எலும்பினால் அது உருவாக்கப்பட்டிருக்கலாம். மார்ப்புக்கூடு, இடுப்பு சட்டம் மற்றும் மண்டையோடு ஆகியவற்றை உருவாக்குவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருந்தது. முதலிரண்டு அமைப்புகளும், நான் சொல்ல வேண்டுமென்றால், அதைச் சுற்றி இருந்த கொழுப்பு வரிகளினால் அதிகமாகவோ குறைவாகவோ பார்வைக்குத் தெரியும்படி இருந்தது. இந்த அளவிற்கு நேர்த்தியானை ஒரு வேலைப்பட்டினைச் செய்த படைப்பாளியின் பெயரை கோகோல் ஒருபோதும் எனக்குத் தெரிவிக்காதது ஒரு வருத்தம்தான். அவரது மறுப்பில் அப்போது இருந்த பிடிவாதம் ஏனென்பது எனக்கு ஒருபோதும் தெளிவுறவே இல்லை.
அவர் தானே கண்டறிந்த ஒரு பம்பு மூலமாக – இன்று இயந்திர பட்டறைகளில் இரண்டு கால்களின் நடுவே இடுக்கிகொண்டு பயன்படுத்தும் வகைகளைப் போல இருந்தது – தன் மனைவியின் ஆசனவாயில் வைத்து அவளை காற்றடித்து ஊதிப் பெரிதாக்கினார். ஆசன வாயின் உட்புறத்தில் ஒரு வால்வு அமைந்திருந்தது, இதயத்தின் மிட்ரல் வால்வினைப் போல, அது உடல் ஊதப்படும் தோறும், அதிக காற்றை உள்ளனுப்பும்; ஆனால் வெளியே வர விடாது. காற்றை வெளியேற்ற, தொண்டையின் பின்னால் இருந்து ஒரு வாயில் இருக்கும் ஒரு நிறுத்தியைத் திருகிவிட வேண்டும்.
இத்துடன் இந்த கவனிக்கப்பட வேண்டிய தனித்தன்மையான இந்த பொருளைப் பற்றிய விவரணங்கள் தீர்ந்துவிட்டன என்று எண்ணுகிறேன். ஒருவேளை நான் இதை சொல்லாமல் விட்டிருக்கக்குடாது, அவளது அற்புதமான வெண்ணிற வரிசை பற்கள் அவளது வாயினை அலங்கரித்ததோடு, இருண்ட விழிகள் – அவள் அசைவற்றிருந்த போதும், கச்சிதமாக ஒரு உயிர்பொருளை உருவகித்திருந்தது. உருவகம் என்றா நான் சொனேன்? நல்லவேளை, உருவகம் என்பது உகந்த வார்த்தையல்ல. ஒருவர் கராகஸைப் பற்றி பேசுகையில், எதுவுமே உகந்த வார்த்தை என்று தோன்றவில்லை. இருப்பினும், அவ்வப்போது, கோகோல் உதவியை நாடும் ஒரு நீண்ட சோர்வுதரக்கூடிய ஒரு செயல்பாட்டின் மூலம் இந்த விழிகளும் கூட நிறமாற்றத்திற்கு உட்படும் திறனுடையது. இறுதியாக, ஒரேயொரு முறை மட்டுமே எனக்கு கேட்ட குடுக்கப்பட்ட அவளது குரலினைப் பற்றி நான் பேசியாக வேண்டும், ஆனால் கணவன் மனைவியின் இடையேயான உறவினைப் பற்றி முழுமையாக விளக்காமல், அதைப்பற்றி என்னால் பேச இயலாது, மேலும் இதில் எல்லா உண்மைகளையும் முற்றிலும் சான்றுடன் என்னால் பதிலிட முடியாது.
இங்கிருந்து வருவபவை, எனக்கு நடந்தவாறு, சில நினைவுகளே.
நான் முன்பே குறிப்பிட்டவாறு, நிகோலாய் வசிலிவிட்சிடம் அவர் மனைவி பேசியதை நான் முதலும் கடைசியுமாகக் கேட்டது ஒரு மாலைப் பொழுதில், நாங்கள் முழுதும் தணித்திருக்கையில். நாங்கள் அந்த பெண்மணி இருந்த அறையில் – எனக்கு அனுமதி அளிக்கப்பட்டால் இப்படிச் சொல்வேன் – வாழ்ந்த அறையில்! இந்த அறைக்கான நுழைவு கறாராக அனைவருக்கும் தடை செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு சிறப்பான அமைப்பில் இருந்த அந்த அறையில், எந்த ஜன்னல்களும் இல்லை, மேலும் அதன் அமைவிடமானது வீட்டின் அணுகமுடியாத இடத்தில் இருந்தது. எனக்கு அவளால் பேச முடியும் என்பது மட்டும் தெரியும், ஆனால் எந்த சூழலில் இது நடந்தது என்பதை கோகோல் என்னிடம் எப்போதுமே விவரித்ததில்லை. அங்கு நாங்கள் இருவர் – அல்லது, மூவர் – மட்டுமே இருந்தோம். நிகோலாய் வசிலிவிட்சும் நானும் வோட்கா அருந்தியவாறு புக்தோவின் நாவலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். இந்த தலைப்பை நாங்கள் விட்டுவிட்டது எனக்கு நினைவிருக்கிறது, பரம்பரை சொத்து பற்றிய சட்டத்தில் அத்தியாவசியமான தீவிர சீர்திருத்தங்களைப் பற்றி அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட நாங்கள் அவளை மறந்தே விட்டிருந்தோம். அப்போதுதான் அது, ரதிதேவி வந்து மலர் மஞ்சத்தில் கிடந்தாற்போல ஒரு மெல்லிய அடிபணிந்த குரலில், தெள்ளத் தெளிவாக சொன்னாள் “நான் கக்கா போகனும்” என்று. நான் திடுக்கிட்டு, தவறாகக் கேட்டு விட்டதாக எண்ணிக் கொண்டு, அவளைக் குறுக்காக பார்த்தேன். அவள் ஒரு தலையணைக் குவியலின் மேல், சுவற்றில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள்; அந்த மாலை, அவள் மென்மையான, பொன்னிற, முழுதாக போர்த்தப்பட்ட அழகியாக இருந்தாள். அவளது முகவெட்டு விவேகம், பூடகம், குழந்தைத்தனம் மற்றும் பொறுப்பற்றதனங்களின் கலவையாக இருந்தது. கோகோலைப் பொறுத்தவரை கடுமையாக வெட்கிச் சிவந்ததுடன், அவள் மேல் பாய்ந்து அவளது தொண்டையின் அடியில் இரண்டு விரல்களைச் சொருகினார். அவள் உடனடியாக சுருங்க தொடங்கினாள்; வெளுத்துப்போனாள். அவள் வியக்கத்தக்கவாறு காற்றினை இழந்து ஒருமுறை மீண்டாள், கடைசியில் ஒரு அக்கறையற்றுப் போன எலும்பு கவசத்தின் மேல் தொங்கிப்போன தோலாக ஆகிப்போனாள். எதார்த்தமான காரணங்களாக, உடனடியாக தெய்வீக தோற்றத்தை பெற்றாள். அவளுக்கு ஒரு மிகச்சிறந்த தண்டுவட எழும்பு, இரண்டாக அவள் உடலை மடிக்க ஏற்றதாக பயன்பட்டது. அந்த மாலையின் மீதிப்பொழுதில், தான் குன்றிய இடத்தில் இருந்து, அவள் எங்களை முழு இழிமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்று கோகோல் “அவள் இதை வெறும் விளையாட்டுக்காக, என்னை வெறுப்பேற்றவே சொல்கிறாள். உண்மையில் அவளுக்கு இதுபோன்ற தேவைகள் ஏதுமில்லை” என்று சொன்னார். மற்றவர்களது முன்பாக – அன்று என் முன்பாக, அவளை அலட்சியம் செய்வதாக, ஒரு பொதுவான விசயமாக அதைச் சொன்னார். நாங்கள் தொடர்ந்து பருகிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தோம், இருப்பினும் நிகோலாய் வசிலிவிட்ச் அதிகமான மனச்சிதறலுடனும், அங்கிருக்காதவராகவும் தோற்றமளித்தார். ஒருமுறை திடீரென அவர் கைகளுக்குள் என் கைகளைப் பற்றிக்கொண்டு அவர் சொல்லிக்கொண்டிருந்தது கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது. “இப்போது என்னால் என்ன செய்ய முடியும்?” என்று வியப்புடன் சொன்னார். “ஃபோமா பஸ்கலோவிட்ச் அவர்களே, உங்களுக்குப் புரிகிறதுதானே நான் அவளைக் காதலிக்கிறேன் என்பது?”
ஒரு அற்புதம் நிகழ்ந்தால் ஒழிய கராகஸின் வடிவத்தை மீளுருவாக்குவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பது குறிப்பிடவேண்டியது அவசியமாகிறது. அவள் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய ஜீவன்; முன்பிருந்த கராகஸின் வடிவத்தை அதே விகிதாச்சாரங்களில், அதே அழுத்தத்தில் என மீண்டும் காணவேண்டி முயன்றால் அது வீணான முயற்சியாகவே இருக்கும். அதனாலேயே அன்றைய மாலையின் பொன்னிற அழகி கோகோலுக்கு காலகாலத்துக்கும் இல்லாமல் போனதே; நான் முன்பே குறிப்பிட்டபடி, இது உண்மையில் வசிலிவிட்சின் சில காதல்களுள் ஒன்றின் சோகமான முடிவேயாகும். அவர் எனக்கு எந்தவித விளக்கமும் தரவில்லை; எனது சுதந்திரத்தையும், சௌகரியத்தையும் அவர் மறுதலித்தார்; அன்று மாலை விரைவில் நாங்கள் கிளம்பினோம். அந்த திடீர் கோபத்தினால் அவரது இதயம் என் முன்னே விரிந்து கிடந்தது. அதன் பின்னர் அவர் என்னிடம் அதிகம் தயக்கம் காட்டுபவராக இல்லை, விரைவிலேயே ரகசியங்கள் என எதுமின்றி போனது. இது எனக்கு பெருமிதம் தந்தது என்பதை அடைப்புக்குறிகளுக்குள்ளேனும் நான் குறிப்பிட்டாக வேண்டும். அந்த காதலர்களுக்கான உறவு தொடக்கத்தில் சிறப்பாக இருந்துவந்ததாகவே தெரிகிறது. நிகோலாய் வசிலிவிட்ச் கராகாஸின் துணையுடன் திருப்தியாகவே இருந்துள்ளார்; தொடர்ந்து, அவளுடன் ஒரே கட்டிலில் துயின்றுள்ளார். கடைசிவரை இந்த வழக்கத்தை அவர் கொண்டுள்ளார். ஒரு பயந்த சிரிப்புடன், எந்த ஒரு துணைவியும், இவள்போல அமைதியாகவோ, குறைந்த தொல்லை தருபவராகவோ இருந்திட முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்தார். விரைவில் இதை நான் சந்தேகிக்க தொடங்கினேன், குறிப்பாக அவர் துயிலெழுந்ததும் இருக்கும் நிலையைக் கனித்ததால். அப்போது, பல ஆண்டுகள் கழிந்து, அவர்களது உறவுநிலை விசித்திரமான முறையில் சீர்கெட்டிருந்தது.
இவை அனைத்தையும், இன்னொரு முறை மட்டும், இது ஒரு விளக்கத்தின் மீதான திட்டமிட்ட செயல் என்று குறிப்பிட்டு சொல்கிறேன். அந்த நேரத்தில், அந்த பெண்மணி தனக்கான சுதந்திரம் -`சுயசார்பு` என்றும் சொல்லலாம் – தொடர்பான அறிகுறிகளைக் காட்டிக்கொண்டிருந்தாள். நிகோலாய் வசிலிவிட்ச்க்கு அவள் தனக்கான தனித்தன்மையை அடைந்துகொண்டிருக்கிறாள் என்பதாக ஒரு அசாதாரண உணர்வு வந்தது. அது புரிந்துகொள்ள முடியாத, சொல்லப்போனால் அவர் பண்பிலிருந்து மாறுபட்டு அவர் கைகளை விட்டே நழுவி செல்வதாக இருந்தது. அவளது ஒவ்வொரு தோற்றத்திற்கும் இடையில் ஒரு ஒற்றுமை உருவாகியது என்பது மட்டும் திண்ணம். அதாவது, அந்த மாநிற, செந்நிற, பொன்னிற, செம்பட்டை நிற அழகிகளுக்கிடையே, குண்டான அல்லது ஒல்லியான தேகங்களிடையே, மங்கலான, பணிபோன்று வெளுத்த அல்லது தங்கமென மின்னும் அழகிகளிடையே ஏதோ சில பண்புகள் ஒரேமாதிரி நிச்சயம் இருந்தன. இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில், கராகஸின் உடலாக ஒரேயொருவர் இருந்திருப்பாரா என்ற சந்தேகத்தைத் தொட்டிருந்தேன். இருந்தபோதிலும் என்னாலும் அதன் பதிலை அறுதியிட்டு கூற முடியவில்லை. அவளை பார்க்கும்போதெல்லாம், அந்த எண்ணத்திலிருந்து என்னை நானே வெளியேற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.கேட்கவே சற்று, புதிதாக இருக்கலாம், அவள் அடிப்படையில் ஒரே பெண்மணிதான். இதனால்தான் கோகோலுக்கு அவளுக்கு ஒரு பெயர் இடவேண்டும் என்ற எண்ணம் தோன்றியும் இருக்கலாம்.
வெவ்வேறு வடிவங்களின் ஒத்த பண்புகளை உருவாக்கும் முயற்சியும் இதற்கு நுட்பமான வாழ்வடிவை தந்திருக்கும். சொல்லப்போனால், இது நிகோலாய் வசிலிவிட்சின் படைப்பு சார்ந்த உத்வேகமன்றி வேறொன்றும் கூடுதலோ குறைவோ இல்லை. அவர் இத்தனை தயக்கமும் இத்தனை வேறுபாடுகளும் தன் மீதே கொண்டிருப்பார் என்பதே அதீத ஒருமையும் விசித்திரமும் கொண்டதாக இருக்கும். ஏனென்றால் அவள் யாராக இருந்தாலும், கராகஸ் ஒரு குழப்பம்தரும் இருப்பு – இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் – விரோததனமான ஒருத்தி. கோகோலோ, நானோ அவளது உண்மை இயல்பினை குறித்து, ஏற்கதக்க கருதுகோள் ஒன்றினை சூத்திரப்படுத்திவிடுவதில் வெற்றி பெறமுடியவில்லை. சூத்திரப்படுத்துதல் என்று குறிப்பிடுகையில், நான் அர்த்தப்படுத்துவது யாதெனின் எல்லாருக்கும் அறிவுக்குகந்ததாகவும், அணுகமுடிந்ததாகவுமான கருதுகோள் ஒன்றை. ஆனால் அந்த நேரத்தில் இடம்பெற்ற ஒரு அசாதரண நிகழ்வை என்னால் கடந்து செல்ல இயலவில்லை.
ஒரு அருவருக்கத்தக்க நோயில் கராகஸ் வீழ்ந்தாள் – இல்லை கோகோலுக்கு அந்த நோய் வந்ததோ – கோகோலுக்கு அப்போதும் எப்போதும் வேறொரு பெண்ணுடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை. நான் இது எப்படி நடந்தது என்பதையோ அல்லது எப்படி இந்த இழிவான புகார் வந்தது என்பதையோ கூட விளக்க முனையவில்லை – எனக்கு தெரிந்ததெல்லாம் இது நடந்துவிட்டது என்பதே. அதையடுத்து, அந்த உயர்ந்த, மகிழ்வற்ற நண்பன் என்னிடம் சொன்னார், “ஃபோமா பாஸ்கலோவிட்ச், இதோ பார் கராகஸின் இதயத்தில் இருப்பது என்னவென்று; இது சீமகப்புண்ணின் வேலை”.
சிலநேரங்களில் அவர் அவரையே அபத்தமான முறையில் பழி சொல்லிக் கொள்வார். அவர் எப்போதும் சுய குற்றச்சாட்டு சொல்லும் பழக்கத்திற்கு உட்பட்டவர். கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான உறவானது ஏற்கனவே பகையார்ந்த ஒன்றையும், நிகோலோய் வசிலிவிட்சின் உணர்வுகள் சம்பந்தப்பட்டவரை விரோத மனப்போக்கையும் தொடர்ந்த இந்த நிகழ்வானது நிஜமாகவே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது. அந்த காலத்தின் நீண்ட களைப்புதரும் சிகிச்சையை மேற்கொள்ள அவர் கட்டாயத்திற்கு உள்ளானார். ஆனால் அந்த சூழ்நிலையில் பெண்களுக்கு அந்த நோயினை குணப்படுத்துவதென்பது எளிமையானதாக இருக்கவில்லை என்பதே உண்மை. கோகோல், தன் மனைவியை வெவ்வேறு அம்சங்களில் மாற்றி ஊதிவிடுவதனால் இந்த நோய்தொற்றிலிருந்து அவளை காக்க முடியும் என்ற பொய்யான நம்பிக்கைகளுக்கு சில சமயங்களில் ஆளானார். ஆனால் இதில் எந்தவித பயனும் இல்லை என்று தெரிந்ததும், அவர் விலகியிருக்க நிர்பந்திக்கப்பட்டார்.
எனது வாசகர்களை சலிப்புறச் செய்யாதிருக்க, நான் சுருக்கமாக கூறவிருக்கிறேன். மேலும் நான் நினைவு கொண்டவைகள் யாவும், மேலும் மேலும் குழப்பமானதாக ஆகிக்கொண்டிருப்பதால் நேரடியாக சோகமான முடிவினை நோக்கி துரிதப்பட இருக்கிறேன்.எந்த தவறும் ஏற்பட்டுவிடக்கூடாது. நான் சொல்லவந்த விசயங்களில் தெளிவுடன் இருக்கிறேன் என்பதை நான் மீண்டும் அதை உறுதிபட கூறியே ஆகவேண்டும். நான் ஒரு நேரில் கண்ட சாட்சியாக இருந்தேன். நான் அவ்விதம் இல்லாமலும் இருந்திருக்கலாம்!
ஆண்டுகள் கடந்தன. நிகோலாய் வசிலிவிட்ச் அவர் மனைவி மீது கொண்டிருந்த காதல் குறைந்து வருவதற்கான எந்தவித அறிகுறியும் தெரியாதபோதும், அவர் அவள் மீது கொண்ட வெறுப்பு வலுவாகிக் கொண்டிருந்தது. முடிவினருகே, வெறுப்பும் ஈர்ப்பும் ஒன்றுடன் ஒன்று அவர் இதயத்தில் கடுமையான போராட்டத்தைச் செய்து கொண்டிருந்தது அவரை பாதித்தது. கிட்டத்தட்ட மனமுடைந்தே போனார். வழக்கமாக, தன்னுடன் உரையாடலில் இருப்பவருடன் பலவிதமான உணர்ச்சிகளைக் காட்டும் அவரது ஓய்வற்ற விழிகள், இப்போது கிட்டத்தட்ட ஒருவித காய்ச்சலால் பிரகாசிப்பதாக ஒளிர்ந்தது, ஏதோ போதை மருந்தினைப் பயன்படுத்தினால் வந்த விளைவாக அது தோன்றியது. அர்த்தமற்ற பயங்களினூடே அவர் விசித்திரமான உந்துதல்களால் எழுச்சி பெற்றார். கராகஸைப் பற்றி அவர் என்னிடம் பேசுகையில், அடிக்கடி அவள்மீது நினைக்கவே முடியாத, வியத்தகு குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்த இடங்களில், என்னால் அவரை தொடர முடியவில்லை, ஏனென்றால் நான் அவரது மனைவியுடன் அரைகுறை அறிமுகம் கொண்டவனாகவும், நெருங்கிய தொடர்பற்றவனாகவும் இருந்துள்ளேன் – அதற்கும் மேலாக அவரை விட மிகவும் குறைந்த உணர்வுத்திறன் பெற்றவனாகவே நான் இருந்துள்ளேன். நான் அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொள்வதோடு மட்டும் இருந்துகொள்கிறேன், மாறாக எனது தனிப்பட்ட எண்ணங்களை குறிப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்கிறேன்.
“நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஃபொமா பஸ்கலொவிட்ச்,” இப்படித்தான் அடிக்கடி என்னிடம் சொல்வார், “நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, அவளுக்கு வயதாகிறது!” பின் பேசமுடியாத அளவிற்கு அவர் எதையோ உணர்ந்து, அவர் பாணியில் என் கைகளை அவர் கைகளுக்குள் எடுத்திக்கொள்வார். அவர் கராகஸ் தனிமையாக சுகங்களை அனுபவிப்பதற்கே முனைவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதை அவர் வெளிப்படையாகவே தடைசெய்தார். இன்னும் ஒரு படி மேலே சென்று, அவள் தனக்கு துரோகம் செய்வதாக குற்றம்சாட்டினார், அவர் சொன்ன விசயங்கள் எல்லாம் தீவிர பகையுணர்வில் சொல்லப்பட்டவை அதனால், நான் அதைப் பற்றிச் சொல்வதை எல்லாம் இதற்கு மேலுமாவது தவிர்க்க வேண்டும்.
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது அது யாதெனில், கராகஸின் இறுதி காலத்தில், அவளுக்கு வயதானதோ இல்லையோ தெரியாது, ஒரு கசப்பான ஜீவனாக, சிடுசிடுப்பான, வஞ்சகத்தனமான ஒருத்தியாக மாறிவிட்டிருந்தாள். எல்லாருக்கும் தெளிவாகத் தெரிந்தபடி, கோகோலின் இறுதி காலங்களில் அவரது தார்மீக விசயங்களின் நிலையில், அவள் ஆதிக்கம் கொண்டிருந்ததை சொல்லவேண்டியதன் சாத்தியத்தை நான் விலக்கவில்லை. அந்த சோகமான உச்சகட்டம் ஒருநாள் இரவு எதிர்பாராமல், நானும் நிகோலாய் வசிலிவிட்சும் அவரது திருமணத்தின் வெள்ளிவிழாவை கொண்டாடுகையில் நடந்தது. அது நாங்கள் இறுதியாக ஒன்றாக கழித்த மாலைப்பொழுதுகளில் ஒன்று. தன் சகவாசியைப் பொருத்துக்கொள்வதற்கான தோற்றங்கள் அத்தனையிலிருந்தும் அவர் விலகி இருந்த ஒரு சமயத்தில், அவர் அந்த முடிவை எடுக்க காரணமான நிகழ்வை என்னால் தடுத்து நிறுத்திட முடியவுமில்லை, தடுப்பதற்கான முயற்சிகளை நான் செய்யவுமில்லை. ஆனால் அன்று புதிதாக என்ன நிகழ்ந்தது என்பது நான் அறியாத ஒன்று. நான் உண்மைகளின் எல்லைக்குள் மட்டுமே பேசவேண்டும், என் வாசகர்கள் அவர்களால் உருவாக்க முடிந்ததை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அந்த மாலையில் நிகோலாய் வசிலிவிட்ச் வழக்கத்திற்கு மாறாக கிளர்ச்சியுற்றிருந்தார். அவர் கராகஸ் மேல் கொண்டிருந்த வெறுப்பானது இதற்கு முன்சம்பவிக்காத அளவிற்கு செறிவோடிருந்தது. பிரசித்தி பெற்ற “தற்பெருமைகளின் சாம்பல்” – தன் கையெழுத்துப் பிரதிகளை எரிப்பது – ஏற்கனவே நடந்து முடிந்திருந்தது. அவரது மனைவியின் தீய தூண்டுதலாலோ இல்லையோ என்றவாறு சொல்லிவிட நான் விரும்பவில்லை. அவரது மனநிலை பல்வேறு காரணங்களால் அழற்சியுற்றிருந்தது. அவரது உடல்நிலையைப் பொறுத்தவரை, எப்போதிருந்ததையும் விட அப்போது இரங்கத்தக்கதாக இருந்தது, நான் அவர் போதை பொருளைப் பயன்படுத்துவதாக கொண்ட எண்ணத்தை அது வலுவாக்குவதாக இருந்தது. இருப்பினும், கிட்டத்தட்ட சாதாரணமான தோரணையில் அவர் பெலின்ஸ்கியைப் பற்றியும் அவன் ‘தேர்ந்தெடுத்த கடிதங்கள்’ மூலம் அவருக்குத் தந்த தொந்தரவுகளையும் பற்றி பேசினார். பிறகு, திடீரென, கண்ணிர் ததும்பிய விழிகளுடன் அவராகவே இடையிட்டு அழத்தொடங்கினார்: “முடியவே இல்லை, இது ரொம்ப அதிகம், இதை என்னால் தொடர்ந்து தாங்க முடியவில்லை.” இதுமட்டுமின்றி, கோபமான அர்த்ததொடர்ச்சியற்ற சொற்றொடர்களை அவர் சொன்னார், நிச்சயம் அதை அவர் விளக்கப் போவதில்லை. அவர் தனக்கு தானே பேசிக்கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அவர் கைகளை முறுக்கினார், தலையை அதிர்வுறச் செய்தார், நான்கைந்து பதற்றமான நடைகளை அந்த அறையில் நடந்ததும் மீண்டும் எழுந்து அமர்ந்தார். கராகஸ் தோன்றியதும், அல்லது அவளது அறைக்கு மாலையின் பின்பகுதியில் நாங்கள் சென்று அவளை அடைந்ததும், அவர் தன்மீதிருந்த கட்டுக்களை தொடராமல், ஒரு வயது முதிர்ந்த கிழவன் போல (என் மனத்தில் இருப்பதை சொல்லவேண்டுமெனில்) – அவரது இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்பதை போல – தன் அபத்தமான செயல்களுக்கு வழிவிட்டார். உதாரணமாக முழங்கையால் என்னை இடித்தும், கண்ணடித்தும் “அங்கே இருக்கிறாள் அவள், ஃபோமா பாஸ்கலோவிட்ச், அங்கே இருக்கிறாள் அவள்” என்று அர்த்தமின்றி ஒப்பித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அலட்சியமான கவனத்துடன் அவள் எங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. ஆனால் இந்த செய்கைகளின் பின்னால் அவரது அதிவெறுப்பு, தாங்கமுடியாத எல்லைகளைத் தொட்டிருப்பதை யாரும் உணர முடியும், மெய்யாக…
கொஞ்ச நேரத்தில் நிகோலாய் வசிலிவிட்சின் துணிவானது பிடுங்கி எடுக்கப்பட்டது. அவர் வெடித்தழுதார், இருப்பினும் அந்த கண்ணீரில் ஒரு ஆண்மைத்தனம் மெலிதாக வெளிப்பட்டது. அவர் தன் கைகளை மீண்டும் முறுக்கி, தன் கைகளுக்குள் என் கைகளை எடுத்து, முணுமுணுத்தார், “இது போதும், எங்களால் இதை தொடர முடியாது. உலகில் கேட்காத கதை இது. இது ஏன் எனக்கு மட்டும் நடக்கின்றது? ஒரு மனிதனை எப்படி இதை தாங்கிட எதிர்பார்க்க முடியும்?” அதன் இருப்பு, அப்போதுதான் அவருக்கு நினைவு வந்திருக்க வேண்டும், அவர் சீற்றத்துடன் பம்ப்பை நோக்கித் தாவி, தன் கைகளில் எடுத்து, சுழல்காற்றைப் போல கராகஸை நோக்கி தூக்கி எறிந்தார். அவளது ஆசன வாயில் நுழைத்து, காற்றடித்து அவளை உப்பச்செய்தார். சற்றே அழுது, பின் பித்துப்பிடித்தாற் போல, “எப்படியெல்லாம் காதலித்தேன், என் இரக்கத்திற்குரிய அன்பே… ஆனால் அவள் இப்போது வெடிக்கப் போகிறாள்! மகிழ்வற்ற கராகஸே, கடவுளின் கீழான படைப்பே! ஆனால் அவள் நிச்சயம் இறக்க வேண்டும்.”
கராகஸ் வீங்கினாள், நிகோலாய் வசிலிவிட்ச் வியர்த்தார், அழுதார், தொடர்ந்து காற்றழுத்த செய்தார். அவரை நிறுத்த நான் எண்ணம் கொண்டேன், ஆனால் எனக்குத் தெரியும் ஏன் செய்யவில்லை என, எனக்கந்த தைரியம் இல்லை. அவள் அவலட்சணமாகத் தொடங்கி, சிறிது நேரத்தில் அரக்கத்தனத்தின் உச்சவடிவத்தைப் பெற்றாள், இருந்தாலும் இது போன்ற ஜோக்குகளுக்குப் பழகிய அவள் எந்தவித சலனமும் தெரிவிக்கவில்லை. ஆனால், தாங்கமுடியாத அளவிற்கு நிறைவுற்றதும் அல்லது நிகோலாய் வசிலிவிட்சின் நோக்கங்கள் அவளுக்குப் புரிந்ததும், அவள் ஒரு விலங்குத்தனமான திகைப்பையும், சிறிதளவு கெஞ்சலையும் கொண்ட ஒரு முகபாவத்தை வெளிப்படுத்தினாள், ஆனால் இன்னமும் தன் அலட்சியப் பார்வையை அவள் விட்டுவிடவே இல்லை. அவள் பயமுற்றாள், அதையும் தாண்டி அவரிடம் மன்னிப்புக் கேட்கவும் தன்னை ஒப்புவித்தாள், இருப்பினும் அவளால் அவளது உடனடி இறப்பை நம்பமுடியவில்லை; அவளால் தன் கணவனின் போக்கிரித்தனமான அச்சுறுத்தலை நம்பமுடியவில்லை. அவளது முகத்தை அவரால் காண முடியவில்லை, ஏனென்றால் அவளுக்குப் பின்னால் அவர் இருந்தார். ஆனால், ஒரு விரலைக்கூட ஆட்டாமல், நான் அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கடைசியாக, அவளது மண்டையோட்டின் அடிப்புறத்திலிருந்து முறிகின்ற எலும்புகளின் வழியே உள்ளார்ந்த அழுத்தம் வெளிப்பட்டது, விவரிக்க முடியாத ஒரு பறவை அலகு போன்ற அமைப்பை அது அவள் முகத்தில் அச்சிட்டது. அவள் வயிறு, அவள் தொடைகள், அவள் உதடுகள், அவளது முலைகள் மேலும் என்னால் பார்க்க முடிந்த அவளது புட்டம் அனைத்தும் வியக்குமளவிற்கு வீக்கமுற்றன. திடீரென்று அவள் ஏப்பம் விட அதைத் தொடர்ந்து ஒரு நீண்ட இரைக்கும் முனகல்; இரண்டு நிகழ்வுகளும், அதிகப்படியான அழுத்தத்தின் உயர்வு அவள் தொண்டையில் இருக்கும் வால்வின் வழியே ஒரு பாதை ஏற்படுத்தியதால் வந்தது என்று யாராலும் விளக்கிட முடியும். அவளது கண்கள் தன் குழிகளிலிருந்து குதிக்கப்போவதாக வீங்கி காணப்பட்டது. அவள் மார்பெலும்புகள் மைய எலும்பிலிருந்து பிரியுமளவு அகலமாகி விரிவடைந்தது, அந்த நிலையில் ஒரு கழுதையைச் செரிக்கும் மலைப்பாம்பு போல தோற்றமளித்தாள். கழுதை! அப்படியா சொன்னேன். ஒரு எறுது! ஒரு யானை! இந்த புள்ளியில் அவள் இறந்துவிட்டதாக நான் நினைத்தேன், ஆனால் நிகோலாய் வசிலிவிட்சோ தொடர்ந்து வியர்த்து, அழுது, தொடர்ந்து “எனதருமையே! என் பிரியமானவளே! என் சிறந்தவளே!” என்றவாறு காற்றழுத்தியை அடித்துக் கொண்டிருந்தார்.
திடீரென துண்டுகளாக அவள் வெடித்துப் போனாள். அவளது தோலின் ஒருபகுதி மற்றவைக்கு வழிவகுத்ததாக அல்லாமல் மொத்த பரப்பும் ஒரேயடியாக இல்லாமல் போனது. அவள் காற்றில் பரப்பப்பட்டாள். துண்டுகள் அதன் அளவிற்கேற்றவாறு, ஏறத்தாழ மெதுவாக விழுந்தன. நான் குறிப்பாக அவள் கன்னத்தின் துண்டினை சற்றே உதடு ஒட்டப் பட்டவாறு தட்டுமாடத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டது நினைவிருக்கிறது. நிகோலாய் வசிலிவிட்ச் என்னை ஒரு பித்தன் போல வெறித்தார். பின் தன்னை ஒருங்கமைத்துக் கொண்டு, சீற்றமான உறுதியுடன், ஒரு காலத்தில் கராகஸின் மின்னும் தோலாக இருந்த அந்த கந்தல் துண்டுகளை கவனத்துடன் சேகரித்தார், அவளது அத்தனை துண்டுகளையும்.
“போய்வா, கராகாஸ்” அவர் முணுமுணுத்ததை நான் கேட்டதாக நினைக்கிறேன். “போய் வா, நீ மிகுந்த இரக்கத்திற்கு உரியவள்.” அதற்கு பின், திடீரென, கொஞ்சம் சத்தமாக, “நெருப்பு! நெருப்பு! அவளும் இந்த நெருப்பில் முடியவேண்டும்!”. இடது கையால் குறுக்கே கைவைத்தார். பின், அத்தனை சுருங்கிய கந்தல்களையும் எடுத்துக் கொண்டு, மரச்சாமான்கள் மீதேறி, எதையும் தவறவிடாதவாறு, அடுப்பின் நெருப்பில் நேரடியாக எறிந்தார். அங்கு அது மெதுவாகவும், கடுமையான ஒவ்வாத மணத்துடனும் எரியத் தொடங்கியது. நிகோலாய் வசிலிவிட்ச்சும் எல்லா ரஷ்யர்களையும் போலவே முக்கிய பொருட்களை நெருப்பில் எறிவதற்கான பேரார்வத்தைப் பெற்றிருந்தார்.
சிவந்த முகத்துடன், முகபாவத்தில் காட்டமுடியாத மனக்கசப்பான தோற்றத்தில், ஆனால் அதேசமயம் கபடமான வெற்றிச் சந்தோசத்திலும், அந்த பரிதாபகரமான எச்சங்களின் சிதையின் மேல் தன் கண்களை உருட்டிக் கொண்டிருந்தார்.அவர் என் கையைப் பற்றி வலிப்பு வந்தாற்போல அழுத்திக் கொண்டிருந்தார். ஆனால் முழுமையாக தீக்கிரையாக்கப் பட்ட அந்தசுவடுகள் அவரை அவரே மீண்டும் ஒருங்கிணைத்துக் கொள்ள வைத்தது. அவர் திடீரென எதையோ நினைவில் கொண்டு அல்லது ஒரு வலிமிக்க முடிவினை எடுப்பதாக தோன்றியது. ஒரே மூச்சில் அவர் அறையின் வெளியே இருந்தார்.
ஒரு சில வினாடிகளுக்குப் பின், கதவின் வழியே உடைந்த துயர்மிகுந்த குரலில் அவர் என்னிடம் பேசினார், “ஃபோமா பாஸ்கலோவிட்ச், நீங்கள் என்னைப் பார்க்காமல் இருப்பதாக சத்தியம் செய்து தரவேண்டும். கொலுப்சிக், நான் உள்ளே வருகையில் என்னை பார்க்காமலிருக்க சத்தியம் செய்து தர வேண்டும்.”
நான் என்ன பதிலளித்தேனென எனக்கு நினைவில்லை, அல்லது நான் அவருக்கு ஏதும் உத்திரவாதம் வழங்கினேனோ. அனால் அவர் வலியுறுத்தினார், அதனால் நான் சத்தியம் செய்தாக வேண்டியதாகி விட்டது. அவர் குழந்தை போல ஆனதால், நான் சுவற்றைப் பார்த்தவாறு என் முகத்தை மறைக்கவேண்டியதானது. அவர் சொன்ன பின்னரே என்னால் திரும்ப முடியும். கதவு பலவந்தமாக திறக்கப்பட்டது, நிகோலாய் வசிலிவிட்ச் அறைக்குள் வந்து நெருப்பிடத்தை நோக்கி விரைந்தோடினார்.
இந்த அசாதாரண சூழலில் நான் என்னை நியாயப்படுத்திட முடியும் என்றாலும் இங்கு என் பலவீனத்தை நான் ஏற்ற்க்கொண்டே ஆகவேண்டும். அவர் சொல்லும் முன்னரே நான் நிகோலாய் வசிலிவிட்சை பார்த்துவிட்டேன். அவர் தன் கைகளில் எதையோ எடுத்துச் செல்லும் நேரத்தில். உடனே அவர் அதை நெருப்பில் எறிந்தார், உடனடியாக எரியானது. அதிலிருந்து, எனது அத்தனை எண்ணங்களையும் மீறி அதை பார்க்கவேண்டிய இச்சை மேலோங்கியது. எரியிடத்திற்கு விரைந்தேன். ஆனால், நிகோலாய் வசிலிவிட்ச் எனக்கும் அதற்கும் இடையில் நின்று, நான் அவரால் முடியும் என்று நம்பாத வலிமையுடன் என்னை பின் தள்ளினார். அதே நேரம் அந்த பொருள் எரிந்து புகைமேகங்களானது. அவர் அமைதியுறுவதற்கான அறிகுறிகளைக் காண்பிக்கும் முன்னர், வேறேதுமின்றி, மெளன சாம்பலே எஞ்சியது.
உண்மையில் அதை நான் பார்க்க விழைந்ததன் காரணமே நான் அதை ஏற்கனவே ஒரு கணம் பார்த்துவிட்டிருந்ததே. ஆனால் அது ஒரு கணப்பார்வையே. எவ்விதத்திலும், நான் இந்த உண்மைக்கதையில் கொஞ்சம் கூட தெளிவற்ற விசயங்களை சொல்வதை நான் அனுமதித்துவிடக் கூடாது. ஆனால், ஒரு நேரடி சாட்சியின் வாக்குமூலம், தெளிவின்மை என்பதே இல்லாமல் சொல்லும் கூற்றுகளில் மட்டுமே முழுமைபெறும். ஒரு பெரிய கதையை சுருக்கி சொல்லிடவே இது- அது ஒரு குழந்தை. ரத்தமும் சதையுமான குழந்தையல்ல, ஆனால் ஒரு ரப்பர் பொம்மை, அல்லது ஒரு உருப்படி போன்றது, அதன் தோற்றத்தை வைத்து கணிக்கையில், அதை `கராகஸின் மகன்` என்று அழைக்கலாம் எனத் தோன்றியது.

“நானும் முட்டாளோ என்னவோ?” அது எனக்கு தெரியாது, ஆனால் நான் என் கண்களால் தெளிவாக பார்த்தது இதுதான் என்பது எனக்குத் தெரியும். எனக்கு இந்த இடத்தில் ஏன் அதை நான் குறிப்பிடவில்லை என்பதே எனக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கிறது, அறைக்கு மீண்டு வருகையில் நிகோலாய் வசிலிவிட்ச் தன் பல்லைக் கடித்தவாறு, “அவனும் கூட! அவனும் கூட!” என்று முணுமுணுத்தார்.
இதுதான் நிகோலாய் வசிலிவிட்சின் மனைவியைப் பற்றி எனக்கு தெரிந்த அறிதலின் தொகுப்பு. அடுத்த அத்தியாயத்தில், அதன் பிறகு அவருக்கு என்ன ஏற்பட்டது என்பதை நான் சொல்லியாகவேண்டும், அதுவே அவரது வாழ்வைப் பற்றிய கடைசி அத்தியாயமாக இருக்கும். அனால், இந்த தொகுப்பு முழுவதும் இதை சொல்ல முயன்றிருப்பினும், அவர் மனைவிமீது கொண்ட உணர்வுகளின் விளக்கங்களாக, அல்லது எதுவாகவோ, கொஞ்சம் கடினமான அல்லது வேறு விசயங்கள் பற்றிய அடக்கமான முயற்சியாகத் தெரிவிக்கிறேன். மிகுந்த சர்ச்சைக்குரிய பொருளாக, கோகோலைக் கருதாவிடினும், அவரது மனைவியைக் கருதினால், அதன் மீது போதுமான விவரங்களை அளித்து மர்மத்திரையை விலக்கியுள்ளதாக நான் நம்புகிறேன். இந்த கதையில், நான் உணர்வற்ற குற்றச்சாட்டுகளாக அவர் மனைவியை அடித்தார், மற்ற அபத்தங்களைச் செய்தார் என்பன போன்ற பொய்களை உள்ளார்ந்து பேசியிருக்கிறேன். ஒரு தாழ்ந்த வாழ்க்கை வரலாற்றாசிரியருக்கு, ஒரு உயர்ந்த மேதையின் நினைவுகளை இந்த ஆராய்ச்சியில் பேசியது போன்றதை விட வேறென்ன நோக்கமாக இருந்துவிட முடியும்?
இத்தாலி மூலம் : தொம்மோஸொ லண்டோல்ஃபி
தமிழில் : கோ.கமலக்கண்ணன்